பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை7

தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாம். அகப்பூசை செய்தே புறப்பூசை செய்தல் வேண்டும். புறப்பூசை மட்டும் பூசையாகாது.
பண்ணின் நேர் மொழியாள்:
     திருமறைக் காட்டீசர் சந்நிதிக் கதவு மறைகளால் பூசிக்கப்பட்டு திருக்காப்பிடப்பட்டமையால், அன்று முதல் மக்கள் பக்கத்தில் ஓர் வழி வகுத்துப் பூசை புரிந்து வழிபட்டு வந்தனர். ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் எழுந்தருளியபோது இந்நிலை அறிந்த ஞானசம்பந்தர் நேரே கும்பிடத் திருவருளால் எண்ணினார். அப்பரைத் திறக்கப்பாடுக என்றார். அப்பர், "பண்ணின் நேர்மொழியாள்" என்ற திருப்பதிகம் பாடினார். பத்துப்பாடல்கள் பாடியும் கதவம் திறக்கவில்லை. கடைசிப் பாடலில் இரக்கம் ஒன்றிலீர் என்றபோது கதவம் திறந்தது. இதில் இவ்வூர் அம்மையின் பெயர் தூய தமிழில் "பண்ணின்நேர் மொழியாள்" என்று குறிக்கப்பட்டுள்ளது. யாழைப்பழித்த மொழியம்மை என்று தமிழிலும் "வீணாகானவிதூ ஷினி" என்று வடமொழியிலும் வழங்கி வருகின்றனர். அகச்சான்றாக உள்ள அப்பாடல் காண்க.
பண்ணின் நேர்மொழி யாள்உமை பங்கரோ
மண்ணி னார்வலம் செய்மறைக் காடரோ
கண்ணி னால்உமை காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்மினே

-தி. 5ப. 10பா. 1

இளங்கோயில்:
     பெருமான் எழுந்தருளியுள்ள கருவறை பழுதுற்றிருக்குமானால் அப்பகுதியைச் செப்பம் செய்யவேண்டும். செப்பம் செய்யத் தொடங்குமுன், அத்திருமேனியில் எழுந்தருளியுள்ள பெருமான் திருவுருவை, பாலுள்ள பலா மா முதலிய பலகைகளில் எழுதி அல்லது அம் மரத்தாலாகிய திருவுருவத்தில் மூல லிங்கத்தை ஆவாகனம் செய்து திருப்பணி பூர்த்தியாகும் வரை புதிய திருவுருவத்தையே வழிபட்டு வரலாம். இப்படி ஆவாகனம் செய்வதே சிறு கும்பாபிஷேகம் போலத்தான் ஆகும். எனவே இதனை இளங்கோயில் என்பர். இதனையே வடமொழியில் பால ஆலயம் என்பர். அப்பர் தூய தமிழில் இளங்கோயிலே என்று திருமீயச்சூர்ப் பெருமானைப் பாடுகின்றார். அப்பர் இத்தலத்திற்குச் சென்றபொழுது பெருமான் இளங்கோயிலில் எழுந்தருளி இருந்தமையால் அதையே பாடினார். பெருமான் இளங்கோயிலில் எழுந்தருளிய காலத்தும், கும்பாபிஷேகத்திற்காக வேள்விச் சாலைக்கு எழுந்தருளும் காலத்தும், ஒரு கலை மூலஸ்தானத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மூலஸ்தானத்திலும் வழிபாடு செய்தலே முறையாகும். இளங்கோயில்