பக்கம் எண் :

12ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை(ஐந்தாம் திருமுறை)

     செய்தவன்" என்னும் பாடல் பகுதியால் அறிவிக்கிறார்.
     இப்பதிகத்தின் இறுதிப்பாடலில் இறைவன் மகத்துக்கு மகத்தாகவும் அணுவிற்கு அணுவாகவும் இருப்பதைக் குறிப்பிடுகிறார். "பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே" என்பது அப்பாடல் பகுதியாகும்.
பாதிப்பெண் ஒரு பாகத்தன்:
     "அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்" என்பது சாத்திரம், "ஒருமை பெண்மை உடையன்" என்றார் ஞானசம்பந்தர்.
     "பாதி ஓர் பெண்ணை வைத்தாய்" என்பது சுந்தரர் வாக்கு.
     "சக்தி இன்றிச் சிவம் இல்லை, சிவம் இன்றிச் சக்தி இல்லை."
     இரண்டும் இரு தன்மை கொண்ட ஒரே பொருள் என்பதை யாரும் மறத்தற்கியலாது.
     இக்கருத்தைத் திருவாவடுதுறை அகத்துறைப்பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அப்பாடல் வருமாறு;
பாதிப் பெண்ஒரு பாகத்தன் பன்மறை
ஓதி என்னுளம் கொண்டவன் ஒண்பொருள்
ஆதி ஆவடு தண்துறை மேவிய
சோதி யேசுட ரேஎன்று சொல்லுமே

-தி. 5ப. 29பா. 3

வஞ்சமின்றி வணங்குமின்:
     கரவாடும் வன்நெஞ்சர்க்கரியவன் என்பார் காஞ்சிப்பதிகத்தில். ஆனைக்காவிலும் நாளும் வஞ்சமின்றி வணங்குமின் வைகலும் என்கிறார். மேலும் வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுஉற என்கிறார். நெஞ்சில் வஞ்சமின்றியும் நாவில் வெஞ்சொல் இன்றியும் நினைந்தும் வாழ்த்தியும் வழிபடுவாருக்கு ஆனைக்கா அண்ணல் அஞ்சல் என்று அருள்செய்திடும் என்பவர் மேலும் ஒரு பாடலில் திருகுசிந்தையைத் தீர்த்து, உருகி நைபவர்க்கு அருகில் நின்று அருள்செய்பவன் ஆனைக்கா அண்ணல் என்கிறார். மேலும் ஒரு பாடலில் துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும் நீர் இன்பம் வேண்டுவீர் ஆனால் இராப்பகல் ஏத்துமின், அப்படி என்பொன் ஈசன் இறைவன் என்று உருகுவார்க்கு ஆனைக்கா அண்ணல் அன்பனாய் அருள்புரிவன் என்கிறார்.
     மேலும், "நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே, படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள், தடை ஒன்று இன்றியே தன்னடைந்தார்க்கெலாம், அடைய நின்றிடும் ஆணைக்கா அண்ணலே" என்று அறம் கூறுகிறார். மேலும் மடநெஞ்சமே நேசமாகி நினை என்று அறிவுறுத்துகிறது ஒரு பாடல். இவற்றையெலாம் சிந்தித்துச் சிறப்புறுவோமாக.