அடிகள் சேவடிக் கீழ் நாம் இருப்பது: |
திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் ஒன்று அமைத்து அங்கேயே நிலையாகத் தங்கிவிடுவது என்ற குறிப்பில் அப்பர் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளினார். அங்குத் தங்கி இருப்பதை இறைவன் சேவடிக்கீழ்த் தங்கியிருப்பதாகவே கொண்டார். அவ்வெண்ணங்கள் பாடல் வடிவு கொண்டன. |
"அடிகள் சேவடிக்கீழ் நாம் இருப்பதே" "தீர்த்தன் சேவடிக்கீழ் நாம் இருப்பதே" "ஆதி சேவடிக்கீழ் நாம் இருப்பதே" | |
தி. 5ப. 32பா. 1-10 |
என்ற பத்துப்பாடல்களிலும் பாடியுள்ளார். |
பூணியாய்ப் பணி செய்க: |
திருச்சோற்றுத்துறைப் பதிகமாகிய "கொல்லை ஏற்றினர்" என்ற பதிகம் முழுவதும், திருவடிக்கீழ் நாம் இருந்தாலும் பணி செய்வதில் குறை ஏற்படக்கூடாது என்பதில் கருத்தாய் இருக்கிறார் அப்பர். இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், |
"சோற்றுத் துறையர்க்கே வல்லையாய்ப் பணி செய் மடநெஞ்சமே" "பக்தியாய்ப்பணி செய்மடநெஞ்சமே" "பட்டியாய்ப் பணிசெய் மடநெஞ்சமே" | |
(பட்டி - மீளா அடிமை.) |
"வாதியாய்ப் பணி செய் மடநெஞ்சமே" |
(வாதியாய் - பரமன் புகழ்களையே பேசுபவனாய் பணி செய்வது.) |
"பூணியாய்ப்பணி செய் மடநெஞ்சமே" |
(பூணி - அன்பு.) |
இப்படி இப்பதிகம் முழுதுமே பாடியுள்ளமை கண்டு நாமும் பணிசெய்து உய்வோம். (தி. 5ப. 33பா. 1-10) |
ஒருவர் தாம் பலபேர் உளர்: |
இறைவன் ஒருவரா, பலரா என்பது பலரது உள்ளத்தே எழும் ஐயம். இவ் ஐயத்திற்கு நம் சமயாசாரிய மூர்த்திகள் பல இடங்களிலும் பல்வேறு விதமாகவும் இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார். |
அவற்றுள் இது ஒரு இடம். திருச்செம்பொன்பள்ளி திருக்குறுந்தொகையில் "செம்பொன் பள்ளியார் ஒருவர்தாம் பலபேர் உளர் காண்மினே" என்றருளிச் செய்துள்ளார். கடவுள் ஒருவர்தான். |