பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை21

பற்றியது. இப்பதிகத்துப் பல பாடல்களிலும் அஷ்டபுஷ்பம் சார்த்தலையும் அதன் பலன்களையும் குறிப்பிடுகின்றார்.
வையம் ஆளவும் வைப்பர்:
அப்பர் காஞ்சியை அடுத்துள்ள திருமாற் பேறு செல்கிறார், "ஏதும் ஒன்றும்" எனத் தொடங்கும் பதிகம் பாடுகிறார். அதில் ஏதும் ஒன்றும் அறிவிலராயினும் அஞ்செழுத்தை உபதேச வாயிலாகப் பெற்று ஓதி உருவேற்றினால் அவரவர் உள்ளத்தில் அம்மையப்பராகிய சிவம் விளங்கி மகிழ்விப்பார் என்கிறார். விடமுண்ட கண்டா என ஓதின் வைத்த மாநிதியாகப் பயன் தருவார் என்று வழிப்படுத்துகின்றார். சாத்திரம் பல பேசி அதன்வழி நடவாதாரைச் சாடுகின்றார். கோத்திரம், குலம், எல்லாம் நமக்குத் தேவைதான். அதுவே நம்மை ஈடேற்றிவிடும் என்று எண்ணாதே. பாத்திரம் சிவம் என்பதை மறவாதீர். என்று அறிவுறுத்துகின்றார். அவ்வாறு உணர்ந்தால் ஒரு நொடிப் பொழுதில் உனக்கு அருள் செய்வார். மேலும் செவ்விய இரு பாதங்களையும் வணங்கினால் வையம் ஆளவும் வைப்பர் என்று அறிவிக்கிறார். அப்பாடல் காண்க.
ஐய னேஅர னேஎன் றரற்றினால்
உய்ய லாம்உல கத்தவர் பேணுவர்
செய்ய பாதம் இரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே.

-தி.5ப.60பா.7

கோழம்பம் மேயஎன் உயிர்:
கோழம்பம் என்பது திருவாவடுதுறை, குத்தாலம் முதலிய தலங்களுடன் புராணத் தொடர்புடைய தலம். தேவாரம் பாடுவோர் விநாயகரை அடுத்து முருகனைப் பற்றிப் பாடுவதற்கு இவ்வூர் அப்பர் தேவாரமாகிய "சமர சூரபன்மாவைத் தடிந்த வேல் குமரன்" என்ற பாடலையே ஓதுவர். மேலும் இங்குள்ள இறைவனை அப்பர் பெருமான் தன் உயிராகப் போற்றியுள்ளார். "என் உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே" என்பது அத்தொடராகும். எல்லாத் தலங்கட்கும் முதலாவது கயிலாயம்தான் என்பதையும் இப்பாடலில் குறிப்பிடுகின்றார். குயில் பயிலும் சோலை சூழ்ந்த கோழம்பம் என்று ஊரின் செழிப்பைப் புலப்படுத்துகின்றார். உள்ளம் உருகில் உடன் ஆவார் என்பது சாத்திரம். எனவே உள்ளம் உருகி வழிபட்டு உய்வோமாக. இத்திருத்தலம் உடனடியாகத் திருப்பணி செய்யவேண்டிய தலமாகும். வளமார்ந்த கருத்தமைந்த பாடல் பெற்ற இத்தலம் வளங்குன்றிய நிலையில் உள்ளது. விரைவில் திருப்பணி செய்து சிறப்படைவோம். அப்பாடல் வருமாறு
கயிலை நன்மலை ஆளும் கபாலியை
மயிலி யல்மலை மாதின் மணாளனைக்