குயில்ப யில்பொழில் கோழம்பம் மேயஎன் உயிரி னைநினைந்து உள்ளம் உருகுமே | |
-தி.5ப.64பா.2 |
கோடி அர்ச்சனை: |
இறைவன் இறைவியரது கோடி நாமங்களைச் சொல்லி, மலர்தூவி, குங்குமமிட்டு வழிபடுவதைக் கோடி அர்ச்சனை என்பர். இக்குறிப்பைப் பூவனூர் தேவாரத்தில் அப்பர் குறிப்பிடுகிறார். |
பூவ னூர்புனி தன்திரு நாமம்தான் நாவில் நூறுநூறு ஆயிரம் நண்ணினார் பாவ மாயின பாறிப் பறையவே தேவர் கோவினும் செல்வர்க ளாவரே | |
-தி.5ப.65பா.1 |
நூறாயிரம் ஒரு இலட்சம் நூறு நூறு ஆயிரம் ஒரு கோடி ஆகிறது. கோடி நாமங்களைச் சொல்லி வழிபட்டால் நம் பாவம் பறைவதோடு தேவர் கோவாகிய இந்திரனை விட மேலான செல்வத்தைப் பெறலாம். |
மனிதரில் தலையாய மனிதர்: |
அனுசயம் - பகை. ஒருவருடனும் பகை பாராட்டாது, நட்புப் பாராட்டி கனிந்த மனத்துடன் கண்ணீர் மல்கிப் புனிதனாகிய பூவனூர் இறைவனைப்போற்றி வழிபட்டால், அப்படி வழிபட்டவர் மனிதர்களிலெல்லாம் தலையாயவராகத் திகழ்வர் என்கிறார் அப்பர். அப்பாடல்: |
அனுச யப்பட்டு அதுஇது என்னாதே கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார் மனித ரில்தலை யான மனிதரே. | |
-தி.5ப.65பா.6 |
வலங்கொள்வர் அடி என் தலை மேலவே: |
சைவசமய ஆசாரியர்கள் நால்வரும் அடியவர்களைப் போற்றியவர்கள். சிவபெருமானையும், சிவன்கோயில்களையும், அடியார்களையும் போற்றியவர்களின் பாதங்கள் என் தலைமேலன என்கிறார்கள். நம் ஆசாரியப் பெருமக்கள். அப்பர் திருவலஞ்சுழி சென்று வழிபடுகிறார். அங்கு இலங்கை வேந்தன் இராவணன் நினைவிற்கு வருகிறான். அவனது இருபது தோளும் இற்றுப்போம்படியாக ஒருவிரல் ஊன்றினான் என்கிறார். அவ்விரலும் நலங்கொள் பாதத்து ஒருவிரல் என்கிறார். ஆண்டவன் செய்வன எல்லாம் நல்லனவே.அவன் ஒருவன்தான் நன்றுடையான், தீயதில்லான். எனவே அவன் பாதம் நலம்கொள் பாதம் ஆயிற்று. ஒருவிரல் இராவணனை அழிக்கவில்லை. அடர்த்துத் திருத்தியது. |