| திருமேனி வடபால் சற்று சாய்ந்திருப்பதோடு பால்நிறமாயும் இருக்கின்றது. |
| இதற்கு அப்பர் பதிகம் ஒன்றும் சம்பந்தர்பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன. |
| கல்வெட்டு: |
| இவ்வூரில் திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திரசோழன் முதலாம் இராஜாதிராஜதேவன் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.இக்கல்வெட்டுக்கள், இவ்வூர், சயங்கொண்ட சோழமண்டலத்துப் புலியூர்க்கோட்டத்து, கோட்டூர் நாட்டுக்கு உட்பட்டு இருந்தமையையும் திருப்பள்ளித் தாமம் முதலியவைகளுக்கு நிவந்தங்கள் அளிக்கப் பெற்றமையையும் உணர்த்துகின்றன1. |
| 72. திருவிசயமங்கை |
| பாண்டுவின்மகன் பார்த்தன் (அர்ச்சுனன்) வழிபட்டுப்பேறுபெற்ற தலமாதலால் விசயமங்கை என்னும் பெயர் பெற்றது. இது "பாண்டுவின் மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டு நல்வரங்கொள் விசயமங்கை " என்னும் திருநாவுக்கரசரது திருக்குறுந்தொகை (பாசுரம் 8) ஆல் அறியக் கிடக்கின்றது. விசயமங்கை என்பது கோயிலின் பெயராகும். ஊரின் பெயர் கோவந்தபுத்தூர். ஒரு பசு இலிங்கத்திருமேனியின்மீது தன் மடியிலுள்ள பாலைச் சொரிந்து வழிபட்டகாரணத்தால் இப்பெயர் எய்திற்று. இது "கோதனம் வழிபடக் குலவு நான்மறை வேதியர் தொழுதெழு விசயமங்கையே" எனவரும் இத்தலத்துக்குரிய திருஞானசம்பந்தரது பதிகத்தின் இரண்டாம் பாசுர அடிகளால் விளங்கும். |
| கோ வழிபட்ட ஐதீகத்தை உணர்த்தும் கதைப்படிவம் இக்கோயில் மேற்குப்பிரகாரத்தில் வைத்துப் போற்றப்பட்டு வருகின்றது. இக்கோவந்தபுத்தூரை இப்பக்கத்துள்ள மக்கள் கோகறந்தபுத்தூர் என வழங்குகின்றனர்.ஊரின் பெயர் கோவந்தபுத்தூர் என்பதையும், கோயிலின் பெயர் விசயமங்கை என்பதையும், |
|
| 1See the Annual Reports on South Indian Epigraphy for the year 1909, Numbers 77-83. |