பக்கம் எண் :

26ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை(ஐந்தாம் திருமுறை)

என்று அருளியுள்ளார் அப்பர். ஆமலகக்கனி - அருநெல்லிக்கனி. அப்பாடலைக் காண்போம்.
செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்
நெய்அது ஆடிய நீலக் குடிஅரன்
மையல் ஆய்மற வாமனத் தார்க்குஎலாம்
கையில் ஆமல கக்கனி ஒக்குமே

-தி. 5ப. 72பா. 2

மையல் - அன்பு.
கல்லினோடு - எனைப் - பூட்டி:
     கல்துணைப்பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் என்பது எதிர்காலத்தின் குறிப்பு. எனவே கல்லுடன் இணைத்துக் கடலில் இடவில்லை என்பர் சிலர். அக்கூற்றை அடியோடு அகற்றுதற்கு இதோ ஓர் அகச்சான்று கூறுகிறார் அப்பர் தம் பாடலில்.
கல்லி னோடுஎனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடிஅரன்
நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேன்அன்றே.

-தி. 5ப. 72பா. 7

திருமங்கலக்குடி:
     இத்தலம், ஒரு சுமங்கலியின் மங்கல நாண் காத்து மங்கலம் வழங்கியமையால் திருமங்கலக்குடி எனப்பெயர் பெற்றது. சூரியனார் கோயிலில் உள்ள நவக்கிரகங்கட்கு அருள் செய்த பெருமான் இத்தலத்து இறைவனே. இவரை வணங்கிய பின்னரே சூரியனார் கோயிலை வணங்குதல் முறையாகும். அதுவே பலன்பெறும் வழியுமாகும். இத்தலம் செழுமையானது. செல்வவளம் நிறைந்தது. சிவவேதியர்கள் சிவ நியமத்துடன் வழிபாடு நிகழ்த்துபவர்கள். அவர்களை செல்வமல்கு செழுமறையோர் என்கிறார் அப்பர். மறையோர் தொழுமாறு சிவபெருமான் தேவியோடும் விளங்கும் கோயில் என்கிறார். அப்பாடல் காண்க.
செல்வம் மல்கு திருமங் கலக்குடி
செல்வம் மல்கு சிவநிய மத்தராய்
செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச்
செல்வன் தேவியொ டும்திகழ் கோயிலே

-தி. 5ப.73பா.5

ஊர்தொறும் எறும்பியூர் ஈசன்:
     பல ஊர்களிலும் பல கோயில்கள் உள்ளன. அங்குள்ள திருவுருவங்களில் இருந்து அருள் செய்பவன் ஒருவனே. அவ்வீசன் எறும்பியூரில் இருப்பவனே என்கிறார் அப்பர். இது கடவுள் ஒருவரே