பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை27

என்ற தத்துவத்தை இனிதாக விளக்குகிறது. மேலும், பல தலத்தும் கயிலாய நாதனையே காணலாமே என்பது அப்பர் அருள்மொழி. பேரும், ஊரும், உருவமும் பலவாயினும் அதனுள் இருந்து அருள்புரியும் இறைவன் ஒருவனே என்ற தத்துவ உண்மையை இப்பாடல்கள் வலியுறுத்துகின்றன.
"வான் உறும் பொன்மால்வரைப் பேதையொடு ஊர்தொறும்
எறும்பியூர் மலையான், எங்கள் ஈசனே"

-தி. 5ப.74பா.5

என்பது அப்பர் கூறும் எடுத்துக்காட்டு.
     மேலும் இன்பமும் பிறப்பும், துன்பமும் இறப்பும் உடனே வைத்த சோதி வடிவினன் எறும்பியூர் இறைவன் என்றவர், அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு இன்பனாவன் என்கிறார். இறை உணர்வுடன் இறைவன் நாமத்தைச் சொன்னால் துன்பம் தோன்றாது இன்பமே தோன்றும் என்று அனுபவம் கூறுகிறார். அப்பாடலைக் காண்போம்.
இன்ப மும்பிறப் பும், இறப் பி(ன்)னொடு,
துன்ப மும்உட னேவைத்த சோதியான்
அன்ப னேஅர னேஎன்று அரற்றுவார்க்கு
இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே.

-தி.5ப.74பா.8

மேலும் இப்பாடற் கருத்து துன்பத்தைக் கண்டு துவளக்கூடாது. துன்பம் தான் நம்மிடம் உள்ள அழுக்கைப் போக்கித் தூய்மை செய்வது. நாம் தூய்மை அடைய அடைய இன்பமே எந்நாளும் பெறலாம்.
அப்பனார் உளர் அஞ்சுவது ஏன்:
     ஒழுங்காகச் சிவநெறி பற்றி நின்றால் எந்த இடர்ப்பாடும் நம்மை ஒன்றும் செய்யாது. பிராரத்த வினை வழிப் பல இன்னல்கள் வந்தாலும் அவை உடல் ஊழாய்க் கழியுமே தவிர உயிரைப் பாதிக்காது. மலையே வந்து விழினும் மனிதர்களே அஞ்சாதீர். கொலைசெய் யானையாயினும் அடியவரை ஒன்றும் செய்யாது என்பதையும் தம் அனுபவ வாயிலாக அறிவிக்கின்றார். வானம் மழை பொழியாது பஞ்சம் ஏற்படினும், பூகம்பம் ஏற்படினும் பெருவேந்தர்கள் பலர் சேர்ந்து சீறினாலும் சேறைச் செந்நெறி அப்பனாரை உறுதியாகப் பற்றிவிட்டால் அவர் நம்மைக் காப்பார். அஞ்சவேண்டாம் என அபயம் தருகிறார். அப்பாடல் காண்க.
தப்பி வானம், தரணிகம் பிக்கில்என்?
ஒப்புஇல் வேந்தர் ஒருங்குஉடன் சீறில்என்?
செப்பம் ஆம்சேறைச் செந்நெறி மேவிய
அப்ப னார்உளர்; அஞ்சுவது என்னுக்கே?

-தி.5ப.77 பா.6