பக்கம் எண் :

28ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை(ஐந்தாம் திருமுறை)

புள்ளிருக்கு வேளூர் அரன்:
     இத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் பவரோக வைத்தியநாதன். பவம் - பிறப்பு பிறவி நோயைத் தீர்ப்பவர். எனவே உடல்நோய்களையும் தீர்ப்பவர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இப்பெருமானை நினையாதவர் நரகு எய்துவர் என்கிறார். கூற்றுவனின் சீற்றம் தேய்த்து அருளும் வேளூர்ப் பெருமானை நினைந்து உருகுவோர் உள்ளம் குளிரும். பிறவித் துன்பம் இல்லை. இன்பம் பெருகும். பாவம் பறையும் பெருமானை மெல்ல உள்க வினை கெடும். எல்லாவிதத் துன்பங்களையும் போக்கி, எல்லாவற்றிற்கும் மேலான மோட்சத்தை இவனன்றி யாரும் வழங்க இயலாது என்பதாலேயே வள்ளல் என்ற பெயர் இவரையே சாரும். வள்ளல் பாதம் வணங்கித் தொழுதால் இகத்தில் எல்லா நலன்களும் பெற்று பரத்தில் வீடு பேறு அடையலாம் எனக் குறிப்பிடுகிறார். அப்பாடல்:
உள்ளம் உள்கி உகந்து, சிவன்என்று
மெள்ள உள்க வினைகெடும்; மெய்ம்மையே
புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே!

-தி.5ப.79பா.8

வானோர் வலம் கொள்வர்:
     அன்பில் ஆலந்துறையில் எழுந்தருளியிருக்கும் பெருமானை வலம் வந்து வழிபடுவோரை வானோர் வலம் செய்து வழிபடுவர் என்கிறார் அப்பர். உண்மைத் தொண்டர்களை உலகம் போற்றுகிறது. அதுபோல் நல்ல உள்ளத்துடன் ஆர்வத்தை உள்ளே வைத்து வழிபடுவோரைத் தேவரும் வழிபடுவது இறையருளால் நிகழ்வது. அப்பர் நாலாந் திருமுறையிலும் இக்கருத்தை "தன்னைத், தொழப்படும் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே" என்று குறிப்பிட்டுள்ளமையை ஒப்புநோக்கி மகிழலாம்.
இலங்கை வேந்தன் இருபது தோள்இற்று
மலங்க மாமலை மேல்விரல் வைத்தவன்
அலங்கல் எம்பிரான், அன்பில் ஆலந்துறை
வலம்கொள் வாரைவா னோர்வலம் கொள்வரே

-தி.5ப.80பா.10

கைகண்ட யோகம்:
     நன்று நகு நாண்மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு ஒன்றி வழிபாடு செய்வாரை உயர்கதிக்கு ஏற்றுபவன் சிவன். இது ஞான சம்பந்தர் வாக்கு. அப்பரும் அதே கருத்தைப் பாண்டிக் கொடுமுடித் திருக்குருந்தொகைப் பாடலில் குறிப்பிடுகிறார். வானவர்கள் எல்லாம் நெருங்கி வந்து பாண்டிக்கொடுமுடி ஈசனை இருக்கு வேத மந்திரம்