பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின் ஆசியுரை31

  நமச்சிவாய என்னும் தூல பஞ்சாட்சரத்தின் பெருமை பேசுகின்றார். நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தை முறையாக ஓதினால் அதுவே அவனை நன்னெறிக்கண் கொண்டு செலுத்தும் என்கிறார். ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும் இப்பஞ்சாக்கரத்தை ஓதினால் அதுவே கல்வியைத் தரும். அதன்வாயிலாகக் கலைஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் தரும். மந்திர சாத்திர வித்தையும் கைவரும். எல்லாம் ஐந்தெழுத்தை இடைவிடாது ஓதுவதால் கிடைக்கும். நல்ல நெறியும், அதனால் வீடுபேறும் கிடைக்கும் என்கிறார்.
 
நமச்சி வாயவே ஞானமும் கல்வியும்
நமச்சி வாயவே நான்அறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
 

-தி.5ப.90பா.2

  விறகில் தீயினன்:
  இறைவன் எங்கு இருக்கிறான்? எப்படிக் காண்பது? என்று வினவுவார்க்கு அப்பர் எளிமையாக ஒரு வழி காட்டுகிறார். விறகில் தீ இருப்பது போலவும், பாலில் நெய் இருப்பது போலவும், மணியில் ஒளி இருப்பது போலவும் இறைவன் மறைந்திருக்கிறான். ஆனால் சோதி வடிவாய் இருக்கிறான். அதிலும் மணிச்சோதியாய் மாமணிச்சோதியாய் உள்ளான்.
        அப்படியிருந்தும் நம்கண்ணுக்குத் தெரியவில்லையே என்பார் சிலர். குருட்டுக் கண்ணுக்கு உலகியல் பொருள் தெரியாது அதுபோல அறியாமை நிரம்பிய நம்மனோருக்கு அச்சோதி புலப்படாது. நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவாகிய கோலை நட்டு, உணர்வாகிய கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன்னின்றருளுவான் என்கிறார். அப்பர். முறுகக் கடைய விறகில் தீ தோன்றும். வாங்கிக் கடைய பாலில் நெய் தோன்றும் கடைய மணியில் ஒளி தோன்றும். எனவே பக்தியுடன் உறவுடன் முறுக வாங்கிக் கடைந்து இறைவனைக்கண்டு இன்புறுவோமாக. அப்பாடல்:
 
விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
 

-தி.5ப.90பா.10

  புழுவுக்கும் குணம் நான்கு:
  புழுவுக்குக் குணம் நான்காவன. உணவின் பொருட்டு முயலுதல், உண்டல், உறங்கல், இன்பத் துன்ப நுகர்வு. இந்நான்கும் எனக்கும் உள்ளன். இங்கு எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கு இல்லை. எனவே புழுவிலும் கடைப்பட்டவனாகிய நான் தூயனாகிய