| பெருமானது அடியார்களுடன்கூடிவாழ எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று வினவுகிறார். |
| என்னை ஏதும் அறிந்திலன்: |
| காரிட்ட ஆணவக் கருவறையில் கண்ணிலாக் குழவியைப்போல் இருந்த உயிர்களை இறைவன் தயா என்னும் மூல தர்மத்தின் வழியே பிறவிக்குக் கொண்டுவந்த பிறகே ஒவ்வொன்றையும் உணர்கிறோம். இப்படி வாராத வழியில் நாம் ஒன்றையும் உணரும் வாய்ப்பில்லை. |
| பெருமான் பிறவியைக் கொடுத்துப் பிறவியை அறுக்கிறார். அவ்விறைவன் நமக்குப் பிறவி கருணையினால் கொடாதபோது அவனை நாம் எப்படி அறிவோம். இதனைத்தான் அப்பர், "என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான், அந்நிலையில் அவனையும் நான் அறிந்திலன்" என்கிறார். எனக்கு உடல் முதலிய கருவி கரணங்களைக் கொடுத்து அறியச் செய்தபொழுது அவனை நான் அறியமுடிகிறது என்றார். இதனையே பின் இரண்டடிகளில் "இறைவன் என்னைத்தன் அடியான்" என்று அறிதலும் அவனை நானும் பிரான் - தலைவன் எனக்குப் பிரியமானவன் என்று அறிந்தேன் என்கிறார். அப்பாடல்: |
| என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான் தன்னை நானும்முன் ஏதும் அறந்திலேன் என்னைத் தன்அடி யான்என்று அறிதலும் தன்னை நானும் பிரான்என்று அறிந்தெனே | |
| -தி.5ப.91பா.8 |
| கால பாசத் திருக்குறுந்தொகை: |
| சிவனடியார்களிடத்து இயமனோ அவன் தூதுவர்களோ தொடரக்கூடாது என்பது இறைவன் ஆணை. அவ்வாணையைச் செருக்கினால் கடந்தான் இயமன். அதனால் இறைவன் காலினால் காலனைக் காய்ந்தான் மார்க்கண்டேயற்காக. இதனை எல்லோரும் நன்கு உணருமாறு அப்பர் பெருமான் "காலபாசத் திருக்குறுந்தொகை" என்று ஒரு பதிகமே அருளிச் செய்துள்ளார். |
| கொடுகொட்டி தாளம் கைக்கொண்ட இறைத்தொண்டர்களை நெருங்காதீர் என்றும், இடுக்கண் செய்யப்பெறீர் என்றும், சிவன் என்று அரற்றுவாரை நீங்கள் சாரப்பெறீர் என்றும், நிறைய நீறணிவார் எதிர் செல்லலே என்றும், சாந்தமும் ஏமமும் புனைவார் எதிர்செல்லலே என்றும், ஐந்தெழுத்தில் ஒரு எழுத்தைச் சொல்வாரிடத்தும் சாராதே என்றும், சாராததோடு அடியார்களைப் போற்றிச் செல்மின்கள் என்றும் நமன் தூதுவர்க்கு அறக்கட்டளையிடுகின்றார் அப்பர். அப்பாடல்களில் ஒன்று காண்போம். |