எரி பெருக்குவர்: |
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும் சூரியன், சந்திரன், உயிர், என்பனவுமாகிய எட்டுப்பொருள்களும் இறைவனுக்கு உருவங்களாகும், இவ்வெட்டையும் அட்டமூர்த்தம் என்பர், அட்டமூர்த்தங்கள், இறைவனின் உடல்போல்வன. அவற்றுள் மூர்த்திமானாக விளங்குபவர் இறைவன். இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலே எரிஓம்புகின்றனர் சிலர். அவர்கட்கு ஒரு நரியின் வரலாற்றை உதாரணமாகக் காட்டுகிறார் நாவுக்கரசர். |
ஒரு யாணை காட்டில் இறந்து கிடந்தது. அதனைக் கொல்வதற்காக எய்த அம்பு அதன் பக்கத்தே கிடந்தது. இவற்றைப் பார்த்த நரி பெரும் பயனாகிய யானையை உணவாக உடனே கொள்ளாமல் அருகிலிருந்த அம்பிலும் வில்லிலும் ஒட்டியிருந்த தசையை முதலில் உணவாகக் கொள்ளக் கருதி வில்நரம்பைக் கடித்தது, நரம்பு அறுபட்ட நிலையில் வில் விசிறி அடித்தது. அதனால் நரியின் வாய் கிழிந்து இறந்துபட்டது. |
இதைப்போல் பெரும்பயனாகிய இறைநெறி உணர்ந்து இன்புறாது அக்கினியைப் பார்க்கிறார்களே தவிர அதனுள் இருக்கும் இறையை உணர்கிலர் எரிபெருக்கும் மாந்தர் என்று இரங்குகிறார்.அப்பாடல்: |
எரிபெ ருக்குவர் அவ்எரி ஈசனது உருவ ருக்கம தாவது உணர்கிலார் அரிஅ யற்குஅரி யானை அயர்த்துப்போய் நரிவி ருத்தம தாகுவர் நாடரே. | |
-தி.5ப.100பா.7 |
கல்மனவர்: |
இதைப் போன்றே சூரியனை வணங்குவோரும், சூரியனும் இறைவனது எட்டு உருவங்களுள் ஒன்று என்று உணர்ந்திலர். மேலும் சூரியன் உள்ளே உள்ள பேரொளிப் பொருளாகிய பெருமானை உணர்ந்திலர், மேம்போக்காக சூரியன் உருவத்தையே வணங்கி உட்பொருளை உணராமல் வீணாகின்றனர். அவர்கள் ஓதும் இருக்கு முதலிய வேதங்கள் எல்லாம் ஈசனையே தொழுகின்றன. இக்கருத்தை நினைந்து உய்திபெறாதவர் கல்மனவர் என்கிறார். அப்பாடல்: |
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கன் ஆவான் அரன் உருஅல்லனோ இருக்கு நான்மறை ஈசனையே தொழும் கருத்தி னைநினை யார்கல் மனவரே. | |
-தி.5ப.100பா.8 |