புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே. | |
-தி.5ப.79பா.8 |
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. | |
-தி.5ப.90பா.7 |
என்பன போன்ற பாடல்கள் பலராலும் பலகாலும் ஓதப்பெறுபவை. |
அடங்கன்முறையிலும், அப்பர் தேவாரப் பதிப்புக்களிலும் காணப் பெறாததும், நூலாசிரியர் உரையாசிரியர்களால் மேற்கோளாகக் கூறப்பெறுவதுமாகிய திருக்குறுந்தொகைப் பாடல் ஒன்று ஆய்வறிஞர்களால் கண்டு உணர்த்தப் பெற்றுள்ளது. |
தாயுமானவர், |
"உன்னில்உன்னும் என்ற உறுமொழியால் என்இதயந் தன்னில்உன்னிநன் னெறியைச் சாரும்நாள் எந்நாளோ" | |
எனக் கூறியுள்ளதையும், அருணந்தி சிவம் இருபா இருபதில் |
"கோதில் அமுதக் குணப்பெருங் குன்ற என்னில் ஆர்தலும் அகறலும் என்னைகொல் உன்னில் உன்னி உனாவிடில் பெயர்குவம் என்னும் அதுவே நின்னியல் பெனினே" | |
என்று கூறியதையும் நோக்க, பின்வரும் பாடல் திருக்குறுந்தொகையில் இடம் பெற்றிருந்ததை உணரலாம். |
இருபா இருபதில் மேற்கூறிய பாடல் வரிகளுக்கு அரிய உரை எழுதிய திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் நமச்சிவாயத் தம்பிரான் சுவாமிகள் தாம் கூறிய உரைக்குப் பிரமாணமாக, |
பன்னி லூறும் பழத்தினும் இன்சுவை என்னி லூறி எனக்கே களிதரும் உன்னி லுன்னுமுன் னாவிடில் விட்டிடும் என்னில் ஈசன் இருந்த இயற்கையே. | |
என்ற 'தேவார'த்தில் கண்டுகொள்க என்று எழுதியுள்ளார்கள். |