பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)முதல் பதிப்பின் மதிப்புரை45

தேவாரப் பாசுரங்களினால் சமண சமயத்தின் குறைகளை வெளிப்படுத்தி, சைவ சமயத்தைத் தழைத்தோங்கும்படி செய்தார்.
     இப்பெரியாரது தேவாரப்பாசுரங்கள் 4,5,6 திருமுறைகளாக வகுக்கப்பெற்று இருக்கின்றன. அவற்றுள் தருமை ஆதீனத்து ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள் 4ஆவது திருமுறையை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார்கள். இப்பொழுது 5ஆவது திருமுறையை நல்லமுறையில் வெளியிடுகிறார்கள்.
     5ஆவது திருமுறையில் அப்பர் சுவாமிகள் வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. திருவாய்மூர்ப் பதிகத்தில் இறைவன் தம்மை 'வா' என்று அழைத்ததும், திருமறைக்காட்டுத் திருப்பதிகத்தில் இப் பெரியார் திருமறைக்காட்டுக் கதவு திறக்கப்பாடிய வரலாறும், திருநீலக்குடித் திருப்பதிகத்தில் இவர் கல்மேல் மிதந்த வரலாறும், திருப்பழையாறை வடதளித் திருப்பதிகத்தில் சமணர் அழிவெய்திய வரலாறும், திருக்கோளிலித்திருப்பதிகத்தில் சமணர் மறைத்த இலிங்கம் வெளிப்பட்டமையும், திருவாய்மூர்த் திருப்பதிகத்தில் படிக்காசு பெற்றமையும் காணப் பெறுகின்றன.
     இத்தகைய பேரதிசயங்கள் உண்டாகக்கூடிய செயல்களினால் இறைவனது திருவருளை வெளிப்படுத்தித் தீவினைகளை இறைவனது திருவருளால் நசிப்பிக்கச் செய்ய இயலும் என்பதை மக்கள் உய்யும்படி எடுத்துக்காட்டி மாமறைநூல், திருநீறு, ஐந்தெழுத்து ஆகிய இவை சிறக்கும்படி காலத்தால் சைவ சமயத்திற்குச் செய்த பேருதவி, என்றென்றும் சைவ மக்களின் உள்ளத்தே நிலவி இருக்குமென்பதில் ஐயமில்லை.
     நல்ல காகிதத்தில் சிறந்த முறையில் தக்க குறிப்புரைகளோடு மக்கள் பயிலுதற்கு ஏற்றமுறையில் 5ஆவது திருமுறையாகிய இந்நூலை வெளியிட்டுள்ள, கயிலைக் குருமணி ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களுக்குச் சைவஉலகம் என்றென்றும் கடப்பாடுடையது.
"வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன்நாமமே
சூழ்க வையகமும் துயர்தீர்கவே."