பக்கம் எண் :

46முதல் பதிப்பின் முகவுரை(ஐந்தாம் திருமுறை)


குருபாதம்

முதல் பதிப்பின் முகவுரை

இறை, உயிர், உலகம் என்னும் முப்பகுதியாய் நிற்கும் பொருள்கள் என்றும் உள்ளவை. அவை அநாதி என்பது சாத்திரம். இம்முப்பொருளையும் பதி, பசு, பாசம் என்ற அழகுறுஞ் சொற்களாற் சாத்திரம் தெரிவிக்கும். உயிர்கள் பாசம் நீங்கிப் பதியினைக் கூடியின்புறுதற்கு இடைக்கால நிலையே இவ்வுலக 'வாழ்வு' எனலாம்.
    வாழ்வில் தன் குறிக்கோளை உணர்ந்து மன, மொழி, மெய்களால் தூயனாய் வழிபாடியற்றும் மனிதனுக்கு உலகப் புறத்தோற்றக் கவர்ச்சிகள் தடையாய்நின்று மெய்ஞ்ஞானத்தை அடைய வொட்டாமல் தடுக்கின்றன. சான்றோர்களது அருள் வாக்குகளை திருவருள் மொழிகளைக் கற்றுக் கேட்டுச் சிந்தித்துத் தெளிவதால் இத்தடைகள் நீங்கும் என்பது அநுபவம்.
    தவச்சிறப்பும், ஞானநலமும் வாய்ந்த சான்றோர்களாகிய அருளாளர்கள் வாழ்ந்து அருள் நலம் பெருக்கிவரும் ஞானப்பண்ணைகளே ஆதீனங்களாகிய சைவமடங்கள்.
    மடாலயங்கள் நம் நாட்டில் தொன்றுதொட்டு அறிவு விளக்கம் புரிந்து வரும் அற நிலையங்களாக உள்ளன. தென்னாட்டிலும் வட நாட்டிலுமாக இம்மடங்களின் பணிகள் எண்ணிறந்த பல.
    சைவ இலக்கியப் பேரறிஞராகிய டாக்டர். மா.இராச மாணிக்கனாரவர்கள் இம்மடங்களது தொன்மையைப் பற்றித் தம் நூல்களில் தெளிவுபடுத்தியுள்ளார். கி.மு.249 இல் அசோகன் தன்மகள் சாருமதியுடன் நேபாளம் சென்றதாகவும், அங்கே ஒரு மடம் பசுபதிநாதமடம் என்ற பெயரில் இருந்ததாகவும், அது காட்மண்டு நகரத்திற்கு 3.கி.மீ. வடக்கே அமைந்திருந்ததாகவும், சாருமதி அம்மடத்திற் சேர்ந்ததாகவும், அதனால் அந்த முற்காலத்திலேயே நேபாளத்தில்சைவசமய வளர்ச்சியை அறியலாம் என்றும் தம் நூலில் எழுதியுள்ளார்.1

Monograph on the Religious Sects in india among the Hindus - D. A.Pai. pp.62