பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஐந்தாம் திருமுறையின் உரைச்சிறப்பு49


குருபாதம்

உரைச்சிறப்பு

தருமை ஆதீனத் தமிழ்ப்புலவர், சித்தாந்தக்கலைமணி, வித்துவான்.

சி. அருணைவடிவேலு முதலியார் அவர்கள்

காஞ்சிபுரம்.
தோற்றுவாய்:
     பண்டை நூல்களுக்கு உரை காணுதல் என்பது எளிதான ஒரு செயலன்று; அவற்றுள்ளும் திருமுறைகட்கு உரை காணுதல் இயலாத தொன்றென்றே பலரும் கூறுவர். தவறான உரையைத் திருமுறைகட்கு உரைத்தல் மற்றைய நூல்கட்கு உரைத்தலைவிடக் கூடாததொன்றென்னுங் கருத்தால், 'திருமுறைகட்கு உரை எழுதுதல் கூடாது' என்று சொல்லிவரும் ஒரு வழக்கமும் உண்டாயிற்று. ஆயினும், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று எடுத்து, அவர்களே பெரும்பயன் பெறுவாராகத் திருமுறையுள்ளே சொல்லப்படுவதால், இயன்ற அளவில் திருமுறைகட்கு உரை காணுதலும் இன்றியமையாததேயாம்.
     இதனைத் திருவுளங்கொண்டு, தருமை ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளவர்கள் பல புலவர்களைக் கொண்டு, திருமுறைகட்குக் குறிப்புரை, பொழிப்புரை, திருப்பதிக வரலாறு, முதலியன எழுதுவித்து முறையாக அவைகளை வெளிவரச் செய்து வருகின்றார்கள். அம்முறையில் இதுகாறும் நான்கு திருமுறைகள் மிகச் சிறப்பான முறையில் வெளிவந்துள்ளன. ஐந்தாந் திருமுறை இதுபோது அங்ஙனம் வெளிவருகின்றது.
உரையாசிரியர்கள்:
இதற்குக் குறிப்புரை வரைந்தவர்கள், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரிப் பேராசிரியர், திருநெறிச்செம்மல், வித்துவான். திரு.வி.சா. குருசாமிதேசிகர் அவர்கள்.
     பொழிப்புரை உரைத்தவர்கள், தருமை ஆதீனப் பல்கலைக்