பக்கம் எண் :

50ஐந்தாம் திருமுறையின் உரைச்சிறப்பு(ஐந்தாம் திருமுறை)

கல்லூரி முதல்வர், செஞ்சொற்கொண்டல், வித்துவான். திரு. சொ. சிங்காரவேலனார்,எம்.ஏ., அவர்கள்.
     திருப்பதிகவரலாறு கூறியவர்கள், அக்கல்லூரிப் பேராசிரியர், சிரோமணி, வித்துவான் திரு.வி.சபேசனார் அவர்கள்.
இம்மூவரது அறிவுத் திறனும், ஆராயச்சித் திறனும், பேருழைப்பும் இவ்வுரையில் நன்கு தெளிவாகின்றன. இவர்கட்கு அவ்வப்பொழுது பல அரிய கருத்துக்களையும் விளக்கங்களையும் தந்தும் சில செப்பங்களைச் செய்தும் உதவியவர்கள், காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர் சித்தாந்த சிகாமணி உயர்திரு.க. வச்சிரவேல் முதலியார் அவர்களாவார்கள். அவர்களது உதவியால் இவ்வுரை மேலும் மிக்க சிறப்புற்றுத் திகழ்கின்றது.
     இதன் சிறப்பினை ஆய்ந்து எடுத்துரைக்கும் வண்ணம் ஸ்ரீலஸ்ரீ கயிலைக்குருமணி அவர்கள் அடியேனுக்கு அருளாணையளித்துள்ளார்கள். அவர்களது பெருங்கருணைத்திறத்திற்கு அவர்களது திருவடித்தாமரைகட்கு அடியேனது மன மொழி மெய்களாலாகிய பெருவணக்கத்தினைச், செலுத்தி இவ்வுரைச் சிறப்புக்களில் சிலவற்றை எடுத்துக்காட்ட முயல்கின்றேன்.
செயலின் அருமை:
     திருமுறைகளுள்ளும் தேவாரங்கட்கு பொருள் காணுதல் அரிது. சிலர் தேவாரங்கள் எளிதில் பொருள் விளங்கக் கூடிய வெள்ளைப் பாடல்கள் எனக் கருதுவர். அவர்கள் தேவாரங்களை முற்றிலும் உள் நுழைந்து நோக்காமையாலே அங்ஙனம் கருதுவர். தேவாரங்களுள்ளும் திருநாவுக்கரசரது தேவாரத்தின் பொருளை உணர்தல் மிகமிக அரிது.
     திருநாவுக்கரசரை. 'அலகில் கலைத்துறை தழைப்ப வந்தார்' என்கின்றார் சேக்கிழார்.'அலகில் கலை' என்றது எல்லையற்று விளங்குவதாகிய மெய்க்கலை (ஞானக்கலை) யையேயாம். எனவே, மெய்க்கலையின் அளவற்ற நுண்பொருள்கள் அப்பர் தேவாரத்துள் ஆங்காங்கு நிரம்பிக்கிடப்பனவாம். அவைகளையெல்லாம் உணர்ந்து வெளிப்படுத்துதல் என்பது பெரியதோர் அருஞ் செயலாகும்.
     அச்செயலை மேற்கொண்டு முடித்த இப்புலவர் பெருமக்கள்