பக்கம் எண் :

54ஐந்தாம் திருமுறையின் உரைச்சிறப்பு(ஐந்தாம் திருமுறை)

நய உரைகள்:
     சில இடங்களில் உண்மைப் பொருள்களோடு, நய உரைகள் கூறப்பட்டிருத்தல் அறிவிற்கு விருந்தாய், சுவை பயப்பனவாகும். ஒன்று - இரண்டு - வருமாறு:

"கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே
அங்கை யில்லன லேந்த லழகிதே"

என்பதற்கு(தி.5.ப.9.பா.8) 'இயற்கையின் மாறுபட்ட ஆற்றல்களைத் தன் பேராற்றலுள் அகப்படக்கொண்டு இணைத்து வேண்டியவாறு தொழிற்படுத்துவன் என்பது கருத்து' என்று உண்மையை உணர்த்தியபின்னர், 'உமையம்மைக்குத் தெரியாதபடி கங்கையை மறைத்து வைத்ததே தவறு; மேலும், இல்லை என்று உறுதி உரைப்பார் போலக்கையில் அனல் ஏற்றல் அழகாகுமா என்பது நயம்' எனக் காட்டியிருத்தல் கண்டு இன்புறுதற்கு உரியது.
"கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனிம லர்க்குழற் பாவைநல் லாரினும்
தனிமு டிகவித் தாளு மரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே"
என்னும் திருப்பாடலின் குறிப்பில், (தி.5.ப.14.பா.10) 'இப்பாடலில் கூறும் நான்கு பொருள்களும் குழந்தை, இளைஞர், குமரர், முதியர் என்பார்க்கு, இனிமை பயப்பன' எனக் காட்டியிருத்தல் சுவை பயப்பதொன்றாகும்.
     "நினைவார்க் கெலாம் - ஊற்றுத் தண்டொப்பர் போல்ஒற்றியூரரே" என்பதற்கு, (தி.5.ப.24.பா.3) 'ஊற்று தண்டு - கரும்பு, ஊன்றுகோல். இரட்டுற மொழிந்து கொள்க. வழுக்குழி உதவி, அமைந்துழிப் பேரின்பம் பயப்பர்' என்னும் குறிப்பு பயன் தரத்தக்கதொரு சிறந்த குறிப்பாகும்.

"இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை
மெய்ம்மை தானறி யாது விளம்புவர்"

என்பதற்கு, (தி.5.ப.26.பா.5) ஏகான்மவாதிகள் இம்மையை இல்லை என்றும், உலோகாயதா மறுமையை இல்லை என்றும் பேசுவர் என்று