பக்கம் எண் :

562திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

52. திருநாகேச்சரம்

பதிக வரலாறு:
     திருஇடைமருதை எய்தி அன்பினோடும் வணங்கி வண்டமிழ்ப் பாமாலை பா சாத்தித் திருநாகேச்சரத்துப் பெருமானைப் பரவிப் போற்றியருளியது அத்தமிழ்மாலை, (தி,12 திருநா,புரா.192)

திருக்குறுந்தொகை

ப.தொ.எண்:165

பதிக எண்:52

திருச்சிற்றம்பலம்

1590.
நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு நாகேச் சரவரே.

1

1591.
நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடும்
தேவர் போல்திரு நாகேச் சரவரே.

2


     1, பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர், நல்லவர்; நல்லதோர் நாகத்தைக் கையிற்கொண்டு ஆட்டுவர்; வல்வினைகளைத் தீர்க்கும் மருந்துகள் அளிக்க வல்லவர்; பல்லில்லாத ஓடு கையேந்திப் பலி திரிகின்ற அருடசெல்வர் ஆவர்.
     கு-ரை: நல்லர்- நன்மையுடையவர், ஆட்டுவர் - ஆடச் செய்பவர்; வல்வினை தீர்க்கும் மருந்துகள் வல்லர் என்க. வல்வினை-வலியதாகிய பழவினைகள், மருந்துகள் வல்லர்-பாவினைகளாகிய நோய் தீர்க்கும் அருட்செயல்களில் வல்லவர். போல்-அசை. செல்வர்-உலகமெல்லாம் தம் உடைமையாகக் கொண்டவர்.
     2. பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் நாவலம் பெருந் தீவாகிய (ஜம்புத்வீபம்) காட்டிலுள்ளவர். அனைவரும் மேவிவந்து வணங்கி, வினையொடு பாவமாயினவற்றைப் பற்றறுவித்திடும் தேவர் ஆவர்.