புலித்தோலை ஆடையாக உடுத்த பெருமானே, எட்டுவகைப்பட்ட பூங்கொத்துக்களை இட்டு வணங்கிநிற்கும் அடியார்களுடைய வல்வினைகளை ஓட்டுவார். கு-ரை: பூங்கொத்தாயின-எட்டுவகை மலர்களின் பூங்கொத்துக்கள். மூன்றோடோரைந்து-எட்டு. இட்டு-சாத்தி. வாங்கி-வளைந்து; வணங்கி. வீங்கி -பெருகிய. உடையாடை -உடுத்தற்குரிய ஆடை. 5. பொ-ரை: மீன்களை உடைய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக் கரையில் உள்ள திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும், ஆனை உரித்தவருமாகிய பெருமான், தேன் உடைய அழகிய போதுகளாகிய எட்டுவகைப்பட்ட மணமலர்களை இட்டு வணங்குவார் வினைகளைத் தீர்ப்பவர் ஆவர். கு-ரை: தேனப்போதுகள்-தேன் பொருந்திய பூக்கள். தான்-தானே. அப்போது-அம்மலர்களை. இடுவார்-அருச்சிப்பார். மீனத்தண்புனல்-மீன்கள் நிறைந்த குளிர்ந்த புனல். வேனலானை-கோபமுடையானை. உரித்த-தோலை உரித்தெடுத்த. 6. பொ-ரை: வன்மை உடையதாகிய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும், வேழத்தின் உரியைப் போத்தவருமாகிய பெருமானே, இதழி(ஏழி) யாகிய கொன்றை மலர்களைக் கொண்டு பணிந்த அடியார்களுடைய ஊழியாகத் தொடர்ந்துவரும் பழைய வினைகள் ஓடும்படி நீக்குவார். |