9.பொ-ரை: வலிமை உடையதாய்த் தெளிந்துவரும் அலைகளை உடையதாய்ப் பாய்கின்ற கெடிலநதியின் கரையின்கண் உள்ள வீரட்டத்தில் எழுந்தருளியுள்ள மணம் வீசும் செஞ்சடையை நன்கு கட்டிய பெருமான், மனத்தே இறைவன் திருவுருவைத்தாங்கிச் சிந்தித்து எட்டு வகைப்பட்ட மலர்களால் ஏத்தும் வல்லமை உடைய அடியார்களின் வினைகளைக் கெடுப்பார். கு-ரை: தாரித்து - தரித்து என்பது தாரித்து என நீண்டது. தரித்தல் - மனத்திற்கொள்ளல். தடமலர் - பெரிதாகிய மலர். பாரித்து - மிகுந்து. பாற்றுவார் - கெடுப்பார். மூரி - பெரிய. வேரி - தேன் பொருந்திய மலர்கள். வேய்ந்த - கட்டிய. 10. பொ-ரை: திருவதிகைவீரட்டனார் திருவடி சேரும் அடியார்கள், அட்டபுட்பங்களை விதிமுறைப்படி கொண்டு அட்ட மூர்த்தியும், ஆதியற்றவரும் ஆகிய பெருமானின்பால் அனைந்து பொருந்துமாறு வழிபாடு செய்யும் திறம் உடையவர் ஆவர். கு-ரை: அட்டபுஷ்பம் - எட்டுமலர்கள். அவைகொளுமாறு - பூக்களை எடுக்கும் விதிமுறைப்படி எடுத்து. அட்டமூர்த்தி - எட்டு வடிவினனாகிய இறைவன். அனாதி - ஆதியற்றவன். அட்டுமாறு செய்கிற்ப - இறைவனைச் சூடுமாறு செய்வார்கள். அடிச்சேருமவர்கள் செய்கிற்ப என்க. |