பக்கம் எண் :

580திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

55. திருநாரையூர்

பதிக வரலாறு:
     திருத்தில்லைத் திருப்பதியின் எல்லையினை யிறைஞ்சி யேத்தித் திருநாரையூர் பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12.திருநா.புரா.179.)

திருக்குறுந்தொகை

ப.தொ.எண்:168

பதிக எண்:55

திருச்சிற்றம்பலம்

1622.
வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்
காறு சூடலும் அம்ம அழகிதே.

1

1623.
புள்ளி கொண்ட புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும்
நள்ளி தென்டிரை நாரையூ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலு மம்ம வழகிதே.

2


     1. பொ-ரை: மணம் வீசுகின்ற பூம்பொழில்களை உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள நம் இறைவர், பிறிதொன்றற்கில்லாத பெருஞ்சிறப்புடைய திருக்கயிலாயத்தை உடையவர். உமையம்மையை ஒருபங்கில் உடையவர்; வளைந்த பிறை சூடியவர். ஆயினும் கங்கையாற்றினைச் சடையிற் சூடல் மிக்க அழகும் வியப்பும் உடையதே.
     கு-ரை: வீறுதானுடைய வெற்பன்-பெருமை பொருந்திய மலையரையன். கூன் பிறை - வறைந்த பிறை. நாறு - மணம் கமழும். அம்ம -வியப்புமொழி; மிக என்னும் பொருட்டு.
     2, பொ-ரை: தெளிந்த நீர்வளம் உடைய நாரையூரின் கண் எழுந்தருளியுள்ள பெருமான், புள்ளிகளை உடைய புலித்தோலாடையும், வெள்ளி போன்ற நிறம் கொண்ட திருநீற்றுப் பூச்சுடைய