கு-ரை: ஆவின்பால் கண்டு - காமதேனுவின் பாலை முன் உண்டு அறிந்தமையால், அளவில் அருந்தவப் பாலன் - அளவற்ற அரிய தவத்தை உடைய குழந்தை உபமன்யு. வேண்டலும் - விரும்பி அழுதலும். செல்லென்று - உபமன்யுவை நோக்கிச் செல்வாயாக என்று. கூவினான் - அழைத்து ஏவல் செய்தான். வீடும் - அழியும். உபமன்யு தாய்மாமன் வசிட்டனிடத்து வளர்ந்தபோது உண்டது காமதேநுவின்பால், தந்தை வியாக்கிர பாதரிடம் வந்தபோது அது கிடைக்காமையால் அது வேண்டி அழுதார். "பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈத்த பிரான்" (தி.9.திருப்பல்லாண்டு-9). 7. பொ-ரை: பெருமைமிக்க நல்ல மனைவியும், பெற்ற பிள்ளைகளும், பொருந்திய சுற்றத்தாரும் நிலைத்த சார்பு ஆதல் இல்லையாதலால் ஆடும் பெருமான் உறையும் திருக்கோளிலியை ஏத்தி, நீர் தொழுவீராக; நும் இடர்கள் தீரும். 'இறைவனே இருமைக்கும் நீங்காத்துணை' என்றபடி. கு-ரை: சீர்த்த - சிறப்பின் மிக்க. ஆர்த்த - நம்மோடு ஒன்றாய்ப் பிணித்த. ஆரவாரம் செய்யும் எனினும் அமையும். பற்றிலை - பற்றுக்கோடாதல் இல்லை. இடர் - துன்பம். மனைவி, மக்கள், சுற்றம் என்போர் உயிர்த்துணையாகார். உயிர்க்கும் உடலுக்கும் நிலைத்த துணைவன் சிவபிரானே என்றபடி. தீருமே - ஏகாரம் தேற்றம். 8. பொ-ரை: மயக்கத்தை உடையவராகி மயங்கும் மனிதர்களே! உமக்குரிய காலம் வந்து இறுதியுறுவதற்கு முன்னம், அழகுடைய நீண்ட பொழில்களை உடைய கோளிலியில் விரும்பி உறைகின்ற நீல கண்டனை ஒன்றி நின்று நினைப்பீராக! 'யாக்கை நிலையாமையைக் கருதிப் பேரருளாளனை நினைந்து உய்க!' என்றபடி. |