பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)58.திருப்பழையாறைவடதளி597

58. திருப்பழையாறைவடதளி

பதிக வரலாறு:
     திருநாவுக்கரசர் ஆவடுதண்துறையார் பாதமணைந்திறைஞ்சி ஞானபோனகர்க்குச் செம்பொன் ஆயிரம் பாவுக்களித்த திறம் போற்றிப் பழையாறை செல்பொழிதின் அமணர் மறைத்த வடதளியின் மன்னுஞ் சிவனாரைத் தொழுதருள அமணர்கள் தம் பொய்கொள் விமானம் எனக் கேட்டு உளம்பொறாது புழுங்கி ஆங்கோரிடத்திருந்து கொன்றைமுடியார் செய்ய கழல் உன்னி "வண்ணங்கண்டு நான் உம்மை வணங்கியன்றிப் போகேன்" என்று அமுது செய்யாதே இருந்தார். அண்ணலாரும் அது உணர்ந்து மன்னனுக்கு" அறிவிலமணர் நமை மறைய இருந்தோம்" என்று அங்கு அடையாளக் குறிகள் அருளிச்செய்து "நம்மையரசு கும்பிடுவான் நெறியிலமணர் தமை யழித்து நீக்கிப் போக்கு" என்று அரசனுக்கு அருள்புரிய, அவனும் அறிவுற்று எழுந்து இறைஞ்சி மந்திரிகட்கு இயம்பிக்கடிது எய்தி அடையாளத்தின்வழி கண்டு அமணர் தூரறுத்தான். பின்னர் அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி வழிபாட்டர்ச்சனைக்கு நிவந்தமெல்லாம் அமைத்திறைஞ்ச ஞானவரசும் சென்று இறைஞ்சிப் போற்றியருளியது இத்திருப்பதிகம். (தி.12.திருநா.புரா.294.300.)

திருக்குறுந்தொகை

ப.தொ.எண்:171

பதிக எண்:58

திருச்சிற்றம்பலம்

1652.
தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே
அலையி னார்பொழி லாறை வடதளி
நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.

1


     1. பொ-ரை: தலைமயிரெல்லாவற்றையும் பறிக்கின்ற சமண் ஒழுக்கம் உடையவர்கள் உள்ளத்து நிலையினால் மறைத்தால் மறைக்கவியலுமோ? அலைநீரின் மருங்கிலுள்ள பொழில்கள் சூழ்ந்த பழையாறைவடதளியின்கண் நிலைபெற்றவன் திருவடிகளையே நினைந்து உய்வீர்களாக.