| 60. திருமாற்பேறு |
| பதிக வரலாறு: |
| கச்சிநகர்த் திருமேற்றளிதொழுது திருமாற்பேறு வந்து அணைந்து போற்றிப்பாடி அருளியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.12.திருநா.புரா.327.) |
| திருக்குறுந்தொகை |
| ப.தொ.எண்:173 | பதிக எண்:60 |
| திருச்சிற்றம்பலம் |
1672. | ஏது மொன்று மறிவில ராயினும் ஓதி யஞ்செழுத் தும்முணர் வார்கட்குப் பேத மின்றி யவரவ ருள்ளத்தே மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே. | |
| 1 |
1673. அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள் நிச்ச லுந்நினை யாய்வினை போயறக் கச்ச மாவிட முண்டகண் டாவென வைச்ச மாநிதி யாவர்மாற் பேறரே. | |
| 2 |
|
| 1. பொ-ரை: திருமாற்பேற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவர் ஏதொன்றும் அறியாதவர்கள் ஆனாலும், திருவஞ்செழுத்தை ஓதி உணர்வார்கட்கு வேற்றுமையின்றி அவரவர் உள்ளத்தே தாமும் அம்பிகையுமாய் மகிழ்ந்து வீற்றிருப்பர். |
| கு-ரை: ஏதும் ஒன்றும் - பிறிதொன்றும். ஓதி - அன்போடுஓதி. உணர்வார்கட்கு - திருவைந்தெழுத்தின் உண்மைப் பொருளை அறிபவர்கட்கு. பேதமின்றி - வேறுபாடின்றி. அவரவர் உள்ளத்தே - அவரவரின் மனத்தே. மகிழ்வர் - வீற்றிருந்து அருள்செய்வர். |
| 2. பொ-ரை: நெஞ்சே! அரன் திருநாமங்களை வினைகள் விட்டு நீங்குவதற்காக, நித்தமும் நினைவாயாக; உனக்கு அச்சமில்லை. திருமாற்பேற்று இறைவர், கைப்புள்ள ஆலகால விடத்தை உண்டதிருநீலகண்டர் என்று அன்பொடுகூற, சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன்படுவர். |