பக்கம் எண் :


1718.
ஏழை மாரிடம் நின்றிரு கைக்கொடுண்
கோழை மாரொடுங் கூடிய குற்றமாங்
கூழை பாய்வயற் கோழம்பத் தானடி
ஏழை யேன்முன் மறந்தங் கிருந்ததே.

8

1719.

அரவ ணைப்பயில் மாலயன் வந்தடி
பரவ னைப்பர மாம்பரஞ் சோதியைக்
குரவ னைக்குர வார்பொழிற் கோழம்பத்
துரவ னையொரு வர்க்குணர் வொண்ணுமே.

9


     8. பொ-ரை: ஏழையேனாகிய அடியேன் கூழைமீன்கள் பாய்கின்ற வயல்களை உடைய கோழம்பத்தான் அடியை மறந்து அவர்பால் இருந்தது, பெண்களிடம் நின்று இரண்டு கைகளாலும் அவர்கள் இடும் உணவைக்கொண்டு உண்ணும் கோழைகளோடு கூடிய குற்றமாம்.
     கு-ரை: ஏழைமாரிடம் - பெண்களிடம். இருகைக்கொடு உண் - இரண்டு கைகளாலும் பிச்சையேற்று உண்ணுகின்ற. கோழை மாரொடும் - துணிவற்றவர்களாகிய சமணர்களிடம். கூடிய - சேர்ந்து வாழ்ந்த. குற்றமாம் - குற்றமாகும். கூழை - மீன்கள். பாய் - பாய்கின்ற.
     பெருமானை மறந்து, சமண சமயத்தைச் சார்ந்து அங்கு வாழ்ந்திருந்ததற்குக் காரணம் கோழையரொடும் கூடிய குற்றமாகும் என வினை முடிவு செய்க.
     9. பொ-ரை: பாம்பாகிய படுக்கையில் பயிலும் திருமாலும், பிரமனும் வந்து அடிபரவப்பெறுவானும், பரம்பொருளாகிய உயர்ந்தசோதியும், பரமாசாரியனும் ஆகிய குரவமரங்கள் செறிந்த கோழம்பத்தின்கண் அறிவு வடிவானவனை நீங்குபவர்க்கு உணர்தல் இயலுமோ?
     கு-ரை: அரவணை - ஆதிசேடனாகிய படுக்கை. பயில் - உறங்குகின்ற. மால் - திருமால். அயன் - பிரமன். பரவனை - பரவப்படுபவனை. பரமாம் - மேலான. குரவனை - குருநாதனை. குரவு - குராமரங்கள்.உரவன் - அறிவு வலியுடையவன். ஒருவர்க்கு - நீங்குபவர்க்கு. உணர்வு பொருந்துமோ என்க.