பக்கம் எண் :


65. திருப்பூவனூர்

பதிக வரலாறு:
     ஞான அரசு திருப்பழையாறை வடதளி வணங்கித் திருவானைக்காவிற்குச் செல்பொழுதில் பொன்னியின் இருமருங்கும் உள்ள சிவதலங்களைப் பாடிப் பரவியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.12.திருநா.புரா.301.)

திருக்குறுந்தொகை

ப.தொ.எண்:178

பதிக எண்:65

திருச்சிற்றம்பலம்

1722.

பூவ னூர்ப்புனி தன்திரு நாமந்தான்
நாவில் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.

1

1723.
என்ன னென்மனை யெந்தையெ னாருயிர்
தன்னன் தன்னடி யேன்தன மாகிய
பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
இன்ன னென்றறி வொண்ணா னியற்கையே.

2


     1. பொ-ரை: பூவனூரில் எழுந்தருளியுள்ள இறைவன் திருநாமத்தைத் தம் நாவில் நூறுநூறாயிரம் கூறிப் பரவியவர், தம் பாவங்கள் சிதைந்துகெட்டுத் தேவர் தலைவனாகிய இந்திரனைவிட மிகப் பெருஞ் செல்வர்கள் ஆவர்.
     கு-ரை: புனிதன் - தூயவன். நூறுநூறாயிரம் - ஒரு கோடி. நண்ணினார் - ஓதியவர். பாறி - அழிந்து. பறைய - நீங்க. ஏ அசை. தேவர்கோ - இந்திரன்.
     2. பொ-ரை: பூவனூர் மேவிய இறைவன் என்னை உடையவன்; என் மனையாளாகவும் உள்ளவன்; என் தந்தை; என் உயிர்; தனக்குத்தானே உவமையானவன்; தன்னடியேனுக்குச் செல்வமாக உள்ள பொன்னன்; தன் இயல்பினால் இன்னதன்மையன் என்று அறியவியலாதவன் ஆவன்.