பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)65.திருப்பூவனூர்637

1724.
குற்றங் கூடிக் குணம்பல கூடாதீர்
மற்றுந் தீவினை செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன் பூவனூ ரீசன்பேர்
கற்று வாழ்த்துங் கழிவதன் முன்னமே.

3

1725.

ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் ணீறு துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி வெண்ணியின் தென்கரைப்
பூவ னூர்புகு வார்வினை போகுமே.

4

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: என்னன் - எனக்குற்ற துணையாயிருப்பவன். என்மனை - என்மனைவி போன்றவன். "அப்பன்நீ அம்மை நீ ........... ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ" (தி.6.ப.95.பா.1.). எந்தை - எனக்குத் தந்தையாயிருப்பவன். என் ஆருயிர் - என் அரிய உயிரை. தன்னன் தன்னடியேன் - தனக்குரிய பொருளாயும் தன்னடியவனாயுமுள்ள எனது. தன் - அப்பெருமானுடைய அடியேன் என்க. தனமாகிய பொன்னன் - அடியேனுடைய பெறுதற்கரிய சேமநிதியாகிய பொன்னாயிருப்பவன். இயற்கை - இயல்பு.
     3. பொ-ரை: குற்றங்களே மிகப் பெருகிக் குணம்பல கூடாதவர்களே! புற்றிற்பொருந்திய பாம்பினைச் சூடியவனாகிய பூவனூர் இறைவன் திருநாமத்தை நீர் மடிவதன் முன்பே கற்று வாழ்த்துவீராக; அங்ஙனம் வாழ்த்தினால் நீர் செய்த வினைகளை மாய்க்கலாம்.
     கு-ரை: குற்றம் கூடி - குற்றத்தைக் கூடி. குணம்பல கூடாதீர் - பல நல்ல குணங்களைச் சேராது வாழ்வோரே! மற்றும் தீவினை செய்தன - முன்பிறப்பிற் செய்த வினைகளோடு இப்பிறப்பிற் செய்தனவாய தீயவினைகளையும். மாய்க்கலாம் - அழிக்கலாம். கழிவதன் முன்னம் - இறப்பதன் முன்பாக. கற்று வாழ்த்தும் என வினைமுடிவு செய்க. வாழ்த்தும் - வாழ்த்துங்கள்.
     4. பொ-ரை: பஞ்சகவ்வியங்களை விரும்பித் திருமுழுக்குக் கொள்வானும், தூய வெண்ணீறு செறிந்த செம்மேனியனும், விரிகின்ற பூணூல் மேவியவனும் ஆகிய பெருமானுக்குரியதும் வெண்ணியின் தென்கரைக் கண்ணதுமாகிய பூவனூரின்கண் புக்குத்தொழும் அடியவர்களின் வினை அவரைவிட்டு நீங்கும்.