பக்கம் எண் :

638திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1726.
புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம்புனல்
நல்ல மூர்திநல் லூர்நனி பள்ளியூர்
தில்லை யூர்திரு வாரூர்சீர் காழிநல்
வல்ல மூரென வல்வினை மாயுமே.

5

1727.

அனுச யப்பட் டதுவிது வென்னாதே
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
புனித னைப்பூவ னூரனைப் போற்றுவார்
மனித ரில்தலை யான மனிதரே.

6


     கு-ரை: ஆவின்மேவிய ஐந்து - பஞ்சகவ்யம். அமர்ந்து - விரும்பி. ஆடுவான் - அபிடேகம் கொள்வான். துதைந்த - செறிந்து பொருந்திய. மேவநூல் விரி - பொருந்த நூல்களில் சிறப்பிக்கப்படும். வெண்ணியின் - வெண்ணியாற்றின்.
     5. பொ-ரை: புல்லமும், ஊர்தியூரும், பூவனூரும், புனல் வளம் உடைய நல்லமும், ஊர்திநல்லூரும், நனிபள்ளியூரும், தில்லையூரும், திருவாரூரும், சீர்காழியும், நல்லவல்லமும் ஆகியவற்றைக் கூறியவளவிலேயே வல்வினை நீங்கும்.
     கு-ரை: புல்லம் - எருது. எருது வாகனனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர்கள் இவை. இத்தலங்களை நினைத்துச்சொல்லவினை மாயும் என்க.
     6. பொ-ரை: கனிந்த மனத்தொடு கண்கள் நீர் நிறைந்து, ஐயப்பட்டபொருளன்று இது; தெளிந்தது என்று கருதிப் பூவனூர்ப் புனிதனைப் போற்றும் மனிதர்களே எல்லா மனிதர்களிலும் தலையான மனிதராவர்.
     கு-ரை: அனுசயப்பட்டு - ஒருவரோடு ஒருவர் பகைமையுற்று. அது இது என்னாதே - அது நன்று இது தீது, இது நன்று அது தீது என்று மாறுபடாமல். உலகியல் வாழ்விலும் சமய நெறியிலும் இது பொருந்துவதொன்று. உலகில் இவ்வாறு போட்டியிட்டுப் பகைமை கொள்வார்பலர். சமயநெறியிலும் ஒரு சமயத்தவர் மற்றவரை இகழ்தல் உண்டு ஆதலின் இரு நெறியார்க்கும் பொருந்துவதொன்று இது. கனி மனத்தொடு - கனிந்த மனத்தொடு. தலையான மனிதர் - சிறந்த மனிதர்.