பக்கம் எண் :

640திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1731.
நார ணன்னொடு நான்முக னிந்திரன்
வார ணன்கும ரன்வணங் குங்கழற்
பூர ணன்திருப் பூவனூர் மேவிய
கார ணன்னெனை யாளுடைக் காளையே.

10

1732.

மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை
புக்கெ டுத்தலும் பூவனூ ரன்னடி
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும்
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே.

11

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: ஏவம் - விதிவிலக்குகள். ஏதும் இலா - எதுவும் இல்லாத. சமண் ஏதலர் - சமணர்களாகிய அயலவர். பாவகாரிகள் - பாவத்தைச் செய்பவர்கள். சொல்வலை - சாதுரியப்பேச்சாகிய வலை; பொய்யைப் பிறர் மயங்க மெய்போலக் காட்டுதல். நெறி - சமயம். சொல்வலைப்பட்ட பின் பூவனூர் புகுந்த நாள் இன்று.
     10. பொ-ரை: திருமாலும், பிரமனும், இந்திரனும், விநாயகரும், முருகனும் வணங்கும் கழலை உடைய நிறைவானவனும், திருப்பூவனூரில் பொருந்திய உலககாரணனுமாகிய பெருமானே, என்னை ஆளுடைய காளைபோல்வான்.
     கு-ரை: வாரணன் - யானைமுகக் கடவுளாகிய விநாயகர். பூரணன் - எல்லாவற்றாலும் நிரம்பியவன். காரணன் - எல்லாவற்றிற்கும் முதற்காரணமாயிருப்பவன். காளை - காளை போன்றவன்.
     11. பொ-ரை: மேகத்தையொத்த நிறத்தை உடைய இராவணன் திருக்கயிலையைப் புகுந்தெடுத்தலும், பூவனூர் இறைவன் திருவடியில் மற்ற விரல்களினும் சிறப்புமிக்குள்ள பெருவிரலைச் சற்று ஊன்றுதலும் தன் உறுப்பெல்லாம் பிளந்து வருந்தியபிறகு பாடி அருள்பெற்று உய்ந்தான்.
     கு-ரை: மைக்கடுத்தநிறத்து - கரிய இருளை ஒத்த நிறத்தினை உடைய. புக்கு - அடிவரையில் புகுந்து. மிக்கடுத்த விரல் - இராவணனது செருக்கை அழிக்கப் புகுந்த விரல். பக்கடுத்த பின் - தலைகள் பிளவு ஏற்பட்டு நெரிந்தவுடன். உய்ந்தான் - உயிர் பிழைத்தான்.