| 66. திருவலஞ்சுழி |
| பதிக வரலாறு: |
| திருநல்லூரில் நம்பர் அருள்பெற்றுப் பழையாறையில் உள்ள சிவாலயங்களையும் வணங்கி வண்டமிழ்பாடி வலஞ்சுழியைத்தொழுது ஏத்திப்பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12.திருநா.புரா.215.) |
| திருக்குறுந்தொகை |
| ப.தொ.எண்:179 | பதிக எண்:66 |
| திருச்சிற்றம்பலம் |
1733. | ஓத மார்கட லின்விட முண்டவன் பூத நாயகன் பொற்கயி லைக்கிறை மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப் பாத மேத்தப் பறையும்நம் பாவமே. | |
| 1 |
1734. கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம் எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன் மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனைப் பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே. | |
| 2 |
|
| 1. பொ-ரை: அலைகளை உடைய பாற்கடலினின்றெழுந்த ஆலகாலவிடத்தை உண்டவனும், பூதங்களுக்கு நாயகனும், பொன்வடிவாகிய திருக்கயிலைக்கு இறைவனும், உமையொரு பங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவனின் திருவடியை ஏத்தித்தொழுதால் நம் பாவங்கள் கெடும். |
| கு-ரை: ஓதம் - நீர்ப்பெருக்கு.ஆர் - பொருந்திய. நாயகன் - தலைவன். பொன் - பொன்மயமான. இறை - தலைவன். பறையும் - அழியும், நீங்கும். |
| 2. பொ-ரை: திருக்கயிலைத் தலைவனும், சினந்த பகைவருடைய முப்புரங்களும் எயில்களுடன் தீயெழுமாறு வெல்ல வல்ல திறம் உடையவனும் ஆகிய மயில்கள் ஆரவாரிக்கும் திருவலஞ்சுழி இறைவனைப் பயின்று தொழார் சில பாவிகளாகிய தொண்டர்கள். |