பக்கம் எண் :

644திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1740.
தேடு வார்பிர மன்திரு மாலவர்
ஆடு பாதம் அவரு மறிகிலார்
மாட வீதி வலஞ்சுழி யீசனைத்
தேடு வானுறு கின்றதென் சிந்தையே.

8

1741.

கண்ப னிக்குங்கை கூப்புங்கண் மூன்றுடை
நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும்
வண்பொன் னித்தென் வலஞ்சுழி மேவிய
பண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே.

9


சடையையுடைய புண்ணியனாகிய நீண்ட சோலை சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவன் தன் ஓர் அம்பு கொள்ளவும் முப்புரங்களும் எரிக்கப்பட்டன.
     கு-ரை: புரிசடை - முறுக்குண்ட சடை. மாக்கொள் - அடர்ந்திருத்தலால் கருமை நிறத்தைக்கொண்ட. ஏ கொள - அம்பு தொட்ட அளவால். மாக்கொள் சோலை - மாமரங்களைக்கொண்ட சோலை.
     8. பொ-ரை: பிரமனும், திருமாலும் தேடுவாராகி இறைவனின் ஆடும் திருவடியை அறியும் ஆற்றல் இலராகவும், மாடங்கள் நெடிதுயர்ந்த வீதிகளை உடைய திருவலஞ்சுழி ஈசனை என் சிந்தை தேடுவதற்காக உறுகின்றது!
     கு-ரை: ஆடுபாதம் - அருள்செய்யும் திருவடியாகிய தூக்கிய திருவடியை.
     9. பொ-ரை: கண்ணீர் ததும்புகின்றாள்; கைகூப்பித் தொழுகின்றாள்; முக்கண்ணுடைய நண்பனுக்கு என்னை நான் கொடுப்பேன் என்று சொல்கின்றாள்; வளவிய பொன்னித் தென்கரையில் உள்ள வலஞ்சுழி மேவிய பண்பனாகிய பெருமான் இந்தப் பொன்னனைய தலைவிக்குச் செய்த தன்மை இதுவாகும்.
     கு-ரை: பனிக்கும் - நீர் அரும்பும். என்னை நான்கொடுப்பேன் எனும் - என்னை நானே கொடுத்துக்கொண்டு அவனுக்குரிமையாக்கிக் கொள்வேன் என்று சொல்லுவாள். பண்பன் - நற்பண்புகளின் வடிவமாயிருப்பவன். பொனை - பொன் போன்றவளை. தோழி கூற்று.