பக்கம் எண் :

652திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

நலியுங் கூற்றை நலிந்தநள் ளாறர்தம்
வலியுங் கண்டிறு மாந்து மகிழ்வனே.

4

1754.

உறவ னாய்நிறைந் துள்ளங் குளிர்ப்பவன்
இறைவ னாகிநின் றெண்ணிறைந் தானவன்
நறவ நாறும் பொழிற்றிரு நள்ளாறன்
மறவ னாய்ப்பன்றிப் பின்சென்ற மாயமே.

5

1755.

செக்க ரங்கழி செஞ்சுடர்ச் சோதியார்
நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார்
வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச்
சக்க ரம்மருள் செய்த சதுரரே.

6


     கு-ரை: மலியும் - நிறைந்த. வாளரவம் - ஒளிபொருந்திய பாம்பு. பொலியும் - அழகில் சிறந்து விளங்கும். நலியும் - உயிர்களைத் துன்புறுத்தும். கூற்றை - இயமனை. நலிந்து - உதைத்துத் துன்புறுத்தும். வலியும் - வலிமையினையும்.
     5. பொ-ரை: தேன்மணக்கும் பொழிலை உடைய திருநள்ளாற்றுப்பெருமான் உற்றுப்பொருந்தியவனாய் நிறைந்து உள்ளத்தைக் குளிர்விப்பவன்; இறைவனாகிநின்று எண்ணத்தில் நிறைந்தவன்; மறம் உடையவனாய் அருச்சுனனின் பொருட்டுப் பன்றியின்பின் சென்ற மாயம் என்னையோ?
     கு-ரை: உறவனாய் - உறவுடையவனாய்; நன்மை செய்பவனாய். உள்ளம் நிறைந்து - மனத்தின் கண்ணே நிறைந்து. குளிர்ப்பவன் - மனங்குளிரச் செய்பவன். எண் - எண்ணத்தின் கண்ணே. நறவம் - குங்கும மரம்; தேனுமாம். நாறும் - கமழும். மறவனாய் - அருச்சுனனோடு சண்டையிடப் பன்றியைத் துரத்திச்சென்ற வரலாற்றைக் குறித்தது. மாயம் - பொய்ச்செயலாகிய திருவிளையாட்டு.
     6. பொ-ரை: சிவந்த வானமும் அழகிற்குத்தோற்று உள்ள மழிதற்குக் காரணமாகிய செஞ்சுடர் வீசும் சோதியரும், திகம்பரருமாகிய பாம்பினை ஆர்த்துக் கட்டிய நள்ளாற்றிறைவர் வக்கராசுரன் உயிர் போக்கியவராகிய திருமாலுக்குச் சக்கரப் படையை அருள் செய்த திறம் உடையவர்.