பக்கம் எண் :

660திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

70. திருக்கொண்டீச்சுரம்

பதிக வரலாறு:
     ஞானவரசு திருவீழிமிழலையையும் திருவாஞ்சியத்தையும் போற்றித் திருமறைக்காட்டிற்குச் செல்லும்பொழுது புனிதர் வாழ் பதிகளைப்பாடிப் பரவியவற்றுள் ஒன்று இத்தமிழ்மாலை. (தி.12.திருநா.புரா.263.)

திருக்குறுந்தொகை

ப.தொ.எண்:183

பதிக எண்:70

திருச்சிற்றம்பலம்

1770.

கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்
மண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக்
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே.

1

1771.
சுற்ற முந்துணை நன்மட வாளொடு
பெற்ற மக்களும் பேண லொழிந்தனர்
குற்ற மில்புகழ்க் கொண்டீச் சுரவனார்
பற்ற லாலொரு பற்றுமற் றில்லையே.

2


     1. பொ-ரை: காளை போன்ற ஆடவரிடத்துப் பொருந்திக் கண்டவாறு பேசும் பேச்சாகிய ஏச்சுண்ணும் பெண்களைச் சேராது, சண்டீச்சுரர்க்கு அருள் செய்த கொண்டீச்சுரத்து இறைவன் திருவடியைக் கூறுவீராக.
     கு-ரை: கண்ட பேச்சினில் - பயனற்ற பேச்சுக்களில் ஈடுபட்டு. காளையர் தங்கள் பால் - இளைஞர்களிடத்து. மண்டி - நெருங்கி. ஏச்சுணும் - பின் அவரால் ஏசும்மொழிகளைப் பெறும். கழல் கூறும் - திருவடிகளின் பெருமைகளைக் கூறுங்கள். மாதராரிடத்து அல்லற்படுகிறவர்கள் இறைவன் திருவடிகளைப் பற்றினால் இன்புறுவர்.
     2. பொ-ரை: சுற்றத்தாரும், வாழ்க்கைத்துணையாகிய நல்ல மனைவியோடு பெற்ற பிள்ளைகளும் பேணுதலை ஒழிந்தனராதலால், குற்றமற்ற புகழை உடைய கொண்டீச்சுரத்து இறைவரையன்றி ஒருபற்று மற்று இல்லை.