4. இராஜராஜன் காலத்தில் மேல்வேம்பாநாட்டு நல்லார் குடியினன் ஒருவன் சூரியதேவன் கோயில் கட்டினான் என்றும், அதற்கு வழிபாடு நடத்த முப்பது காசு தந்து அதற்கு 6 மா. நிலமும் விடப்பெற்றது என்றும் தெரிவிக்கிறது. |
5. முதற்குலோத்துங்கன் காலத்தில் வழிபாட்டிற்காக நிலம் தரப்பட்டது . |
6. விக்கிரமசோழன் (கி.பி.1125) காலத்தில் திருப்புத்தூர் அழகிய தேவருக்கு ஒருவிளக்குக்காகப் பணம் தரப்பெற்றது. |
7. கோச்செங்கட்சோழன்: ஒருகல்வெட்டில் குலோத்துங்கச் சோழவளநாட்டு அழகார் திருப்புத்தூர் என்று ஊர்ப்பெயர் குறிக்கப்பெற்றுள்ளது. |
4. திருஅன்பிலாலந்துறை |
சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். திருச்சிராப்பள்ளிக்கு அருகே லால்குடிக்குக் கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளது. திருச்சிராப்பள்ளி, லால்குடி ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் உள்ளன. |
அன்பில் என்பது தலப்பெயர். ஆலந்துறை என்பது கோயில் பெயர். பிரமதேவர், வாகீச முனிவர் முதலியோர் பூசித்த தலம். இது கொள்ளிடக்கரையில் உள்ளது திருஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்தெழுந்தருளியிருந்தபோது, கொள்ளிடம் நீர்ப்பெருக்காய் இருந்ததாகவும், இக்கரையில் இருந்தே பாடியதாகவும், இறைவன் ஆணையின்வண்ணம் விநாயகர் காதைச் சாய்த்துக் கேட்டதாகவும் ஒரு கர்ணபரம்பரைச் செய்தியுண்டு. அதற்கேற்ப தலவிநாயகர் திருவுருவம் முடிசாய்த்துச் செவி சாய்த்துக் கேட்கின்ற பாவனையில் அமைந்திருக்கிறது. |
இறைவன்பெயர் சத்யவாகீசர்; இறைவியின்பெயர் சௌந்தரநாயகி. சத்தியலோகவாசியாகிய பிரமனும், வாகீசரும் பூசித்தமையால் சத்தியவாகீசர் என்ற பெயர் போலும். தீர்த்தம் கொள்ளிடநதி. |