பக்கம் எண் :

1002
 

66. திருநாகேச்சரம்

பதிக வரலாறு:

சுவாமிகள், ஆவடுதண்டுறையாரைப் பணிந்து திருஇடை மருதையடைந்து தொழுதுதிருநாகேச்சரத்தை வழிபட்டுப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12திருநாவு. புரா. 192)

குறிப்பு: இத்திருப்பதிகம், 'சிவபிரானை, அடையாதவர் நன்னெறியை அடையாதவரே' என அறிவுறுத்தருளியது. அடைதல், நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கல் முதலியன செய்தலுமாம். நன்மை, இம்மை, மறுமை இன்பங்களும் வீட்டின்பமுமாம்.'சிவபிரானை அறியாதவர் இம்மை மறுமை இன்பங்களை எண்ணியாங்கு இடையூறின்றிஎளிதின் இனிது எய்துதலும், வீட்டின்பத்தினை எவ்வாற்றானும் எய்துதலும்இலர்' என்பதே உண்மை நூல்களின் துணிபு.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 279

பதிக எண்: 66

திருச்சிற்றம்பலம்

2746.தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந்

தலையவனை மலையவனை உலக மெல்லாம்

ஆயவனைச் சேயவனை அணியான் தன்னை

அழலவனை நிழலவனை அறிய வொண்ணா

மாயவனை மறையவனை மறையோர் தங்கள்

மந்திரனைத் தந்திரனை வளரா நின்ற

தீயவனைத் திருநாகேச் சரத்து ளானைச்

சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

1


1. பொ-ரை: தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தாய் போல்பவனாய், எல்லாருக்கும் தலைவனாய், மலைகளில் உறைபவனாய், எல்லா உலகங்களும் ஆகியவனாய், அடியார் அல்லாதாருக்குத் தீப்போன்றவனாய்ச் சேய்மையிலுள்ளவனாய், அடியார்களுக்குநிழல் போன்றவனாய் அண்மையில் உள்ளவனாய், பிறரால் அறியப்படாதவியத்தகு பண்பு செயல்களை உடையவனாய், வேதம் ஓதுபவனாய், வேதியர்கள் தியானிக்கும் மந்திரவடிவாய் உள்ளவனாய், ஆகமமாக இருப்பவனாய்,வேள்வித்தீயாய் இருப்பவனாய், திருநாகேச்சரத்தில் உள்ள பெருமானை அடைந்து வழிபடாதவர்கள் நல்ல வழியில் செல்லாதவராவர்.