பக்கம் எண் :

1004
 
2748.காரானை உரிபோர்த்த கடவுள் தன்னைக்

காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்

வாரானை மதிப்பவர்தம் மனத்து ளானை

மற்றொருவர் தன்னொப்பா ரொப்பி லாத

ஏரானை இமையவர்தம் பெருமான் தன்னை

இயல்பாகி உலகெலாம் நிறைந்து மிக்க

சீரானைத் திருநாகேச் சரத்து ளானைச்

சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

3


"ஈதலறம்; தீவினைவிட் டீட்டல்பொருள்; எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே இன்பம்; பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு"

(ஒளவையார் பாடல்)

என்றாற் போலக் கூறும் அவற்றின் இலக்கணங்களை. தெரித்தான் -விளக்கினான்.

3. பொ-ரை: யானைத்தோல் போர்த்த கடவுளாய, தன்னை விரும்பி நினையாத கீழ் மக்கள் உள்ளத்துக்கண் வாராதானாய், தன்னை மதிப்பவர் மனத்து இருப்பவனாய், தன்னிகர் இல்லாத அழகனாய், தேவர்கள் தலைவனாய், இயல்பாகவே உலகமெல்லாம் நிறைந்து விளங்கும் பொருள்சேர் புகழ் உடையவனாய்த் திருநாகேச் சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே.

கு-ரை: காரானை உரி - கரிதாகிய யானையினது தோல், 'காதலித்தலும் நினைத்தலும் இல்லாத கயவர்' என்க. கயவர்; கீழ்மக்கள். 'செல்லானை' என்று ஓதற்பாலதனை, "வாரானை" என்று ஓதியது, இடவழுவமைதி.

"இலாத" என்றதனை, "ஒப்பார்" என்றதற்கும் கூட்டுக; இது, பின் வருகின்ற "ஒப்பில்லாத ஏரானை" என்பதனை இனிது விளக்கியருளியவாறு, ஏர் - எழுச்சி; ஈண்டு, 'உயர்வு' என்னும் பொருட்டு,"மிக்க" என்பது, "சீரான்" என்பதன் முதனிலையோடு முடிந்தது.'இறைவன் புகழே உலகெலாம் நிறைந்து மிக்கு விளங்குவது' என்க.