பக்கம் எண் :

1006
 
2750.மெய்யானைத் தன்பக்கல் விரும்பு வார்க்கு

விரும்பாத வரும்பாவி யவர்கட் கென்றும்

பொய்யானைப் புறங்காட்டி லாட லானைப்

பொன்பொலிந்த சடையானைப் பொடிகொள் பூதிப்

பையானைப் பையரவ மசைத்தான் தன்னைப்

பரந்தானைப் பவளமால் வரைபோல் மேனிச்

செய்யானைத் திருநாகேச் சரத்து ளானைச்

சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

5


என மெய்ந்நூல் விளக்கிற்று. 'மலை மேருமலை' என்பது, பின் வருவனவற்றால் விளங்கும். 'அதன்கண் கோத்து' என இயைவித்து உரைக்க.

5. பொ-ரை:தன்பக்கல் விருப்பமுடைய அடியவர்களுக்கு உண்மையானவனாய், தன்னை விரும்பாத கொடிய பாவிகளுக்குப் பொய்யானவனாய், சுடுகாட்டில் கூத்தாடுபவனாய், பொன்போல ஒளிவீசும் சடையினனாய், திருநீறு நிறைந்த பையை உடையவனாய்,பாம்பினை அணிந்தவனாய், எங்கும் பரவியிருப்பவனாய், பவள மலைபோலச் சிவந்த திருமேனியை உடையவனாய்த் திருநாகேச் சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே.

கு-ரை: "விரும்புவார்க்கு" என்றது, 'விருப்பத்தைச் செலுத்துவார்க்கு' என்றவாறாய் நின்றது. 'அவர்க்கு மெய்யன்" என்க. அரும்பாவியர்கள் -நீக்குதற்கரிய மிக்க பாவத்தை யுடையவர்கள்; 'அவர்களே இறைவன் மாட்டுவிருப்பம் செலுத்துதலை ஒழிவார்' என்றபடி. பொய்யான் - சிறிதும் விளங்காது, இல்பொருள்போலவே இருப்பவன். பொன் பொலிந்த - பொன்போல விளங்குகின்ற; அல்வழியாகலின், னகரம் திரியாதாயிற்று. 'பொன் பொதிந்த'எனவும் பாடம் ஓதுவர்.

பொடி - திருவெண்ணீறு. "பூதிப் பை' என்பது, வாளா ஓர்பெயராக அருளப்பட்டது. பை அரவம் - படத்தை உடைய பாம்பு. பரந்தான் - எங்கும் நிறைந்தவன். "மேனிச் செய்யான்" எனச் சினை வினை முதல்மேல்நின்றது.