பக்கம் எண் :

1010
 
2755.சீர்த்தானை யுலகேழுஞ் சிறந்து போற்றச்

சிறந்தானை நிறைந்தோங்கு செல்வன் தன்னைப்

பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழப்

பனிமதியஞ் சடையானைப் புநிதன் தன்னை

ஆர்த்தோடி மலையெடுத்த அரக்கன் அஞ்ச

அருவிரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவந்

தீர்த்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்

சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

10

திருச்சிற்றம்பலம்


'அன்பன்தன்னை' எனவும் பாடங்கள் ஓதுப. 'ஆன்பால், தேறல் தெளி' என்பன அடையடுத்த உவமையாகுபெயர்கள். துளி - மழை; இதனை, "துளியின்மை ஞாலத்திற்கெற்றற்றே வேந்தன் - அளியின்மை வாழும் உயிர்க்கு" (குறள் - 557) என்பதனாலும் அறிக. துரிசு - குற்றம். கரும்பின் பயன் அதன் சாறேயாகலின், அதனையே, "தேறல்" என்றார். "உள்ளால்" என்றதில் ஆல், அசைநிலை;உருபாக உரைப்பாரும் உளர்.

10. பொ-ரை: உலகங்கள் ஏழும் பரவிப் போற்றும்படியான புகழுடையவனாய், ஏனையோரினும்சிறந்தவனாய், நிறைந்து உயரும் செல்வத்தனாய், மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக் கண்ணால் பார்த்தவனாய், பிறை சூடிய சடையினனாய், தூயோனாய், ஆரவாரித்து ஓடிவந்து கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் அஞ்சுமாறு, அவனைக் கால் விரல் ஒன்றினால் நசுக்கியவனாய், தன்னைச் சரணாக அடைந்தவர்களின் பாவங்களைப் போக்குபவனாய், உள்ள திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே.

கு-ரை: சீர்த்தான் - சீரை (புகழை) உடைய பொருளானாயினான். சிறந்து - ஞானத்திற் சிறந்து நின்று; இங்ஙனம் அருளவே அவ்வாறில்லாதார்க்குச் சிவபிரானைப்போற்றுதல் கூடாதாகும் என்பது பெறப்பட்டது. "அருட்செல்வம் செல்வத்துட்செல்வம்" (குறள் - 241) என்பவாகலின், திருவருளை, "செல்வம்" என்றருளினார். மதனவேள் - மன்மதன். பொடி - சாம்பல். 'வீழப் (விழுமாறு)பார்த்தானை' என்க. பனி - குளிர்ச்சி. "மதியம்" என்புழித் தொக்குநின்ற இரண்டனுருபு, 'சடையான்' என்னும் வினைக்குறிப்போடு முடியும்; 'மதிஅம்சடையான்' எனலுமாம். புநிதன் - தூயோன்; ஒன்றிலும் தோய்வில்லாதவன். ஆர்த்து - ஆரவாரித்து.