பக்கம் எண் :

1011
 

67. திருக்கீழ்வேளூர்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவாரூரிலிருக்குங்கால் வலிவலம் பணிந்துபாடியபின்பு கீழ்வேளூர் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.12திருநாவு. புரா. 228)

குறிப்பு: இத்திருப்பதிகம், 'பிறப்பு இறப்பு இன்றி எஞ்ஞான்றும் ஒருதன்மையனாய் இருப்பவன் சிவபிரான் ஒருவனேயாகலின், அவனை அடைந்தோரே அத்தன்மையராய் வாழ்வார்' என அறிவுறுத்து அருளிச் செய்தது.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 280

பதிக எண்: 67

திருச்சிற்றம்பலம்

2756.ஆளான அடியவர்கட் கன்பன் தன்னை

ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க

தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்

சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த

தோளானைத் தோளாத முத்தொப் பானைத்

தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த

கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்

கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

1


1. பொ-ரை: தனக்கு அடிமையான அன்பர்களுக்குத் தானும் அன்பனாய், பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவனாய், நான் அடைக்கலம் புகுந்த திருவடிகளை உடையவனாய், ஒப்பற்றவனாய், சந்தனமும் குங்குமமும் வாசக்கலவைகளும் பூசப்பட்ட தோள்களை உடையவனாய், துளையிடப்படாத முத்தினை ஒப்பவனாய், தூய வெள்ளிய கோவணத்தைக் கீளோடு இடுப்பில் கட்டியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள என்றும் அழிதல் இல்லாத பெருமானை அடைக்கலமாக அடைபவர்கள் பிறந்து இறத்தலாகிய கேட்டினை எதிர்காலத்தில் பெறாதார் ஆவர்.