பக்கம் எண் :

1022
 

68. திருமுதுகுன்றம்

பதிக வரலாறு:

சுவாமிகள், நடுநாட்டில் திருத்தூங்கானை மாடத்திலிருந்து திருவரத்துறை சென்று பணிந்து திருமுதுகுன்றம் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 154-155)

குறிப்பு: இத்திருப்பதிகம், சிவபிரானது அளவற்ற பெருமையைப் பலவாற்றால் நினைந்து, அவனைத் தாம் நெடுங்காலம் தெளியாது மயங்கியிருந்தமை பற்றி இரங்கியருளிச் செய்தது.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 281

பதிக எண்: 68

திருச்சிற்றம்பலம்

2766.கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்

கருதுவார்க் காற்ற எளியான் தன்னைக்

குருமணியைக் கோளரவொன் றாட்டு வானைக்

கொல்வேங்கை யதளானைக் கோவ ணன்னை

அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை

ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க

திருமணியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

1


1. பொ-ரை: கண்ணின் கருமணியைப் போன்று அருமையானவனாய், பொற்குன்று ஒப்பவனாய், தியானிக்கும் அடியவர்களுக்கு மிகவும் எளியவனாய், நல்ல நிறமுடையமாணிக்கமாய், கொடிய பாம்பு ஒன்றினை ஆட்டுபவனாய், வேங்கைத் தோலை உடுத்தவனாய், கோவணம் அணிந்தவனாய், சிந்தாமணியாய், தன்னைச் சரணம் புகுந்தவர்களுக்கு அமுதம் போன்று இனியனாய், பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய், அடியேன் சரணடைந்த வீடுபேறாகிய செல்வத்தை நல்கும்மணியாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினையை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப்போனேனே.

கு-ரை: கருமணி, கண்ணில் உள்ளது. கனகம் - பொன்.