| 2768. | எத்திசையும் வானவர்கள் தொழநின் றானை | | | ஏறூர்ந்த பெம்மானையெம்மா னென்று | | | பத்தனாய்ப் பணிந்தடியேன் தன்னைப்பன்னாள் | | | பாமாலை பாடப் பயல்வித்தானை | | | முத்தினை யென்மணியை மாணிக் கத்தை | | | முளைத்தெழுந்தசெழும்பவளக்கொழுந்தொப்பானைச் | | | சித்தனையென் திருமுதுகுன் றுடையான்தன்னைத் | | | தீவினையேன் அறியாதேதிகைத்த வாறே. | 3 |
உள்ள ஒளி. பேணுவார் - விரும்பிப் போற்றுவார்.பேணி - குறிக்கொண்டு. சீர்ஒளி - (வினைதீர்க்கப்பெற்றார் புகழும்) புகழ்களை உடைய ஒளி;வினை, இருளோடொப்பது ஆகலின், அதனை நீக்குபவனை, "ஒளி" என்று அருளினார். 3. பொ-ரை: எல்லாத்திசைகளிலும் தேவர்களால் தொழப்படுபவனாய், இடபவாகனனாய், அடியேன் என் தலைவன் என்று பக்தியோடு பணியத் தன்னைப் பல நாளும் பாமாலை பாடப்பழகுவித்தவனாய், முத்து, மணி, மாணிக்கம், முளைத்தெழுந்த செம்பவளக் கொத்து என்பன போலக்கண்ணுக்கு இனியவனாய், எல்லாம் செய்யவல்லவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே. கு-ரை: 'வானவர்கள் எத்திசைக் கண்ணும் தொழ ஆங்கு நின்றானை' என்க; தேவர்கள் ஆங்காங்குத் தத்தமக்குரிய இடங்களில்நின்று தம் தம் தொழிலைச் செய்துவருதலின், அவர்கள் ஆங்காங்கு அத்தொழிலை இனிது நடாத்திவாழ்தற் பொருட்டுத் தொழுவாராகலின், அவர்கட்கு ஆங்காங்கு நின்று அருளல் வேண்டுவதாயிற்று; 'வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம்நின்பால் - தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டி" (தி.8 திருவா. திருச்சதகம்- 16) என்று அருளியது காண்க. 'பணிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. "புகழ்புரிந் தில்" (குறள் - 59)என்பதிற்போல. 'பணிந்து பாட என்று இயைத்துரைப்பினுமாம். பன்னாள் பாமாலை பாட அருளினமையை நினைந்து உருகி அருளிச்செய்தார். பவளம், 'கொடி' எனப்படுதலின், "முளைத்தெழுந்த" என்று அருளினார். சித்தன் - எல்லாம் செய்ய வல்லவன்.
|