| 2773. | துறவாதே யாக்கை துறந்தான் தன்னைச் | | | சோதி முழுமுதலாய் நின்றான் தன்னைப் | | | பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப் | | | பெண்ணினோ டாணுருவாய் நின்றான் தன்னை | | | மறவாதே தன்திறமே வாழ்த்துந் தொண்டர் | | | மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற | | | திறலானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத் | | | தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 8 |
நிகழும் நோய்களும், நீங்குமாறு மருந்தாகி அவற்றைப் போக்கியவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே. கு-ரை: 'ஆனையின் உரிதோல் பொங்கப் பொங்கப் போர்த்துத் திரிவான்' எனக்கூட்டுக. "ஆனையின்னுரிதோல்" என்பதில் னகரம், விரித்தல். பொங்குவது, திருமேனியின் ஒளி; 'ஆனையை உரித்த ஞான்று கொண்ட திருமேனியின் பேரொளியைக் காணமாட்டாது தேவர்கள் கண்ணொளி இழக்க, அத்துன்பம் நீங்குதற் பொருட்டுச் சிவபிரான் அவ்யானையின் தோலைத் திருமேனிமறையப் போர்த்துக் கொண்டான்' என்பதே புராணம் ஆதல் உணர்க. காத்தான் -அடக்கினான். மாத்து ஆடி - மகத்தாக (பெரிதாக) ஆடல் புரிந்து. "ஆடி"என்பதனை, "ஆகி" என்பதனோடாயினும், "வணங்கும்" என்பதனோடாயினும் முடிக்க. மணி மந்திரங்களையும் கொள்ள நிற்றலின், "மருந்தும்" என்னும் உம்மை, எச்சம்; சிறப்புமாம்; ஏததேச உருவகமாகலின், 'வல்வினையாகிய நோய்' என உரைக்க. 'வினை வேரறும் வண்ணம்' எனச் சினைவினை முதலொடு சார்த்தி அருளப்பட்டது; 'வினையது வேர்' என்றும், 'வேரோடறும் வண்ணம்' என்றும் உரைப்பினும் அமையும். 8. பொ-ரை: இயல்பாகவே உடம்பு இன்றி இருப்பவனாய், சோதி வடிவினனாய், தான்பிறப்பெடுக்காமல் பிறவி எடுக்கும் உயிர்களுக்கெல்லாம் தானே நலன்செய்பவனாய், பெண்ணுருவும், ஆண் உருவுமாக இருப்பவனாய், தன்னை மறவாமல், தன்பண்பு செயல்களையே வாழ்த்தும் அடியவர்களின் உள்ளத்தே எப்பொழுதும் நிலைபெற்றிருக்கும் பண்பினை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப்போனேனே.
|