பக்கம் எண் :

1029
 
2774.பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப்

புவலோக மெல்லா முழிதந் தானை

முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை

முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்

கற்றூணைக் காளத்தி மலையான் தன்னைக்

கருதாதார் புரமூன்றும் எரிய அம்பால்

செற்றானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

9


கு-ரை: யாக்கையைத் துறவாதே துறந்தமையாவது, இயல்பாகவே உடம்பின்றி இருத்தல். "தானே ஆகி" என்னுமிடத்து, 'துணை' என்பது வருவிக்க. பிறவாதே எவ்வுயிர்க்கும் தானே துணையாதலாவது, தோன்றாது நின்றும் "இத்தனையாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்" (தி.7. ப.29. பா.1.) என வியக்குமாறு, அருளாலே வேண்டும் வடிவங்கொண்டு, இம்மெனத் தோன்றியும் இம்மென மறைந்தும் உயிர்கட்கு வேண்டும் நலங்களைப் புரிந்தருளுதல்; இதனால், கருவாய்ப்பட்டுப்பிறந்து, உணவினால் வளர்ந்து வாழ்ந்து மாயும் உடம்புகளைத் தம்வயத்தாலன்றி வினைவயத்தாற் பெற்றுப் பிறந்தே நிற்பார் உயிர்கட்கு மெய்த்துணைவர் ஆகாமை பெறப்பட்டது. அனவரதம் - எப்பொழுதும். "திறல்" என்றது, அறிந்தாங்கறிதலை.

9. பொ-ரை: பொன்மயமான தூண்போல்பவனாய், புலால் நாற்றம் வீசும் மண்டையோட்டினை ஏந்தி மேல் உலகம் எல்லாம் திரிபவனாய், பிறையை முடிமாலையாக அணிந்தவனாய், முழுமுதற் கடவுளாய், எல்லா உலகங்களிலும் விரவி நின்று, தனக்கு இறுதியில்லாது கற்றூண்போல அவற்றைத் தாங்குபவனாய்க் காளத்தி மலையில் உறைபவனாய், பகைவருடைய மும்மதில்களையும் எரியுமாறு வில்லால் அழித்தவனாய், திருமுதுகுன்றம் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

கு-ரை: "பொற்றூண்" என்றது, உயர்வு பற்றி அருளிய உவமை; "மாசொன்றில்லாப் பொற்றூண்காண்" (ப.8. பா.1) என மற்றோர் இடத்தினும் அருளிச்செய்தார். "புவலோகம்" என்றது, அதனை முதலாக உடைய