பக்கம் எண் :

1030
 
2775.இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி

யெழுநரம்பி னிசைபாட இனிது கேட்டுப்

புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் தன்னைப்

புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை

மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து

வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்

திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

10

திருச்சிற்றம்பலம்


மேலுலகங்களைக் குறித்த ஆகுபெயர். உழிதந்தது, பிச்சை ஏற்றற் பொருட்டு. 'மூவுலகின் கண்ணும்' என உருபு விரிக்க. "கற்றூண்" என்றது உருவகம்; 'எல்லா உலகங்களிலும் விரவி நின்று அவற்றை நிலைபெறுவிக்கின்றவன்' என்பது கருத்து.

10. பொ-ரை: தன்னை இகழ்ந்து, கயிலையை அசைத்த இராவணனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு விரலை ஊன்றி, அவன் ஏழுநரம்புகளைக் கொண்டு இசைபாட, அதனை இனிது கேட்டு, அவன் இசை ஞானத்தைப் புகழ்ந்தவனாய், பூந்துருத்தியில் உறையும் புண்ணியனாய், தேவர்களுக்குச் செல்வமாய், பார்வதி பாகனாய் மகிழ்ந்தவனாய், பிறையைச் சடையில் சூடித் திருமாலைத் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

கு-ரை: இகழ்ந்தான் - அவமதித்தவன்; மதியாது கயிலையைப் பெயர்த்தவன்; இராவணன். 'அவன் பாட' என எடுத்துக்கொண்டு உரைக்க. புகழ்ந்தான் - மகிழ்ந்தான். பூந்துருத்தி, சோழநாட்டுத் தலம்.

நிதி - நிதிபோன்றவன்; அம் தன் சாரியைகள். மகிழ்ந்தான் - இன்புற்றான்; 'பாகம் வைத்து மகிழ்ந்தான்' என்க. திருமாலை ஒரு பாகத்தில் திகழக் கொண்டமை, மேலே காட்டப்பட்டது.