அஃது ஒன்றே, 'சிற்றம்பலம்' என்னும் பெயருடைத்தாயிற்று; இது, காரண இடுகுறிப் பெயர் என்க. புறத்துத் தில்லைச்சிற்றம்பலம், அகத்து நெஞ்சகமும் இறைவற்குச் சிறந்த இடமாம் என்பதனை, 'சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் - உறைவான்" என்னும் தி.8 திருக்கோவையால் உணர்க (20). இவ்வாற்றால், தில்லைச்சிற்றம்பலம் முதற்றிருக் கோயிலாதல் பெறப்படுதலின், அதுவே சிறப்பாக, 'கோயில்' எனப்படுகின்றது. இவ்வாற்றால் அதனையே முதற்கண் வைத்து அருளிச்செய்தார். திருவாரூர் பழைமை பற்றித் தில்லை போலும் பெருமையுடைத்தாதல் பற்றி, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், தமது திருத்தலக்கோவையில் அதனை முதற்கண் வைத்து, தில்லையை அதன் பின்வைத்து, அவற்றிற்குப்பின் ஏனைய தலங்களை அருளிச்செய்தார். திருவாரூரின் பழமை, "ஒருவனாய் உலகேத்த" என்னும் திருப்பதிகத்தால் நன்கு உணர்க. 'காழி' என்பது தவிர்த்து, ஏனைய தலங்கட்கெல்லாம், 'திரு' என்பதனை முதலிற்கொள்க. காழியை, 'சீகாழி' என்றல் மரபு. தில்லைச் சிற்றம்பலம். செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர், கோடிகா, சத்திமுற்றம் இவை சோழ நாட்டுத் தலங்கள். தேவன்குடி - திருந்துதேவன்குடி. கோவல் - கோவலூர்; கோவலூர் வீரட்டம். நடுநாட்டுத் தலம். கோகரணம், துளுவநாட்டுத் தலம். முல்லைப் புறவம் - முல்லைக் கொடியை உடைய காடு; இது, முருகன் பூண்டிக்கு அடை. முருகன்பூண்டி, கொங்குநாட்டுத் தலம். கல்லின் திகழ் - மலையினால் விளங்குகின்ற. காளத்தி, தொண்டைநாட்டுத் தலம். கொல்லியறைப்பள்ளி, முழையூர்,பழையாறை இவை வைப்புத் தலங்கள். 'முளையூர்' என்பதும் பாடம். "குளிர்" என்பது அடைமொழி. நிலவுலகின் பொருட்டு இறைவன் திருக்கயிலையில்புவன பதியாய். அறக்கருணையும் மறக்கருணையும் புரிந்து வீற்றிருத்தலின், மக்கள் யாவரும் அவனையே நினைத்தும், வாழ்த்தியும், வணங்கியும் உய்தல் வேண்டும். அனைவர்க்கும் அது கூடாமை அறிந்து, அப் பெருமான் நிலமுழுதும் ஆங்காங்குத் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருந்து
|