பக்கம் எண் :

1048
 
2794.திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி

தேவூர் சிரபுரஞ்சிற் றேமம் சேறை

கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல்

குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு

அண்டர் தொழும்அதிகை வீரட் டானம்

ஐயா றசோகந்தி ஆமாத் தூருங்

கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்

கயிலாய நாதனையே காண லாமே.

9


கேதாரம், வடநாட்டுத்தலம். வெஞ்சமாக்கூடல், கொங்குநாட்டுத் தலம்.

உஞ்சேனை மகாளம். உருத்திரகோடி பொதியில்மலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம் வேதீச்சுரம், விவீச்சரம், வெற்றியூர், கஞ்சாறு, பஞ்சாக்கை இவை வைப்புத் தலங்கள். மஞ்சு ஆர் - மேகம்படியும். 'மறைக்காட்டுள்ளும், வெற்றியூரினும், பஞ்சாக்கையினும் காணலாம்' என முடிக்க. உம்மைத் தொகை ஒருசொல் நடைத்தாகலின், ஏற்ற பெற்றியால் ஒரோரிடத்து உருபொடு கூடிய எண்ணும்மை கொடுக்கப்பட்டது.

9. பொ-ரை: திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, தேவர்கள் தொழும் அதிகைவீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர்வீரட்டம், கருகாவூர், ... ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.

கு-ரை: சேய்ஞலூர், தேவூர், சிற்றேமம், சேறை, கொண்டீச் சரம், குருகாவூர் வெள்ளடை, ஐயாறு, கண்டியூர் வீரட்டம், கருகாவூர் இவைசோழநாட்டுத் தலங்கள். சிரபுரம் - சீகாழி; இதுவும்செம்பொன் பள்ளியும் மேலும் அருளிச்செய்யப்பட்டன. சில தலங்களை மீளவும் வலியுறுத்து அருளிச்செய்தல், அவற்றிற்கு உள்ள சிறப்புப்பற்றி எனக் கொள்க; அச்சிறப்பு முழுதும் இஞ்ஞான்று நாம் அறிதல் அரிது. 'ஒரு தலத்தை வேறு பெயரால் மீள அருளுதல், அப்பெயர்பற்றி அறியப்படும் பெருமை தோன்றுதற் பொருட்டு' என்பது மேலும் கூறப்பட்டது. 'வெள்ளடை' என்பது குருகாவூர்க் கோயிலின் பெயர்.

அதிகை வீரட்டானம், ஆமாத்தூர் இவை நடுநாட்டுத் தலங்கள்.