பக்கம் எண் :

1050
 
2796.புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்

புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்

வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்

வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி

நிலமலிநெய்த் தானத்தோ டெத் தானத்தும்

நிலவுபெருங் கோயில்பல கண்டால் தொண்டீர்

கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற

கயிலாய நாதனையே காண லாமே.

11

திருச்சிற்றம்பலம்


11. பொ-ரை: புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம், பூவணம், பொய்கை நல்லூர், வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி, வளமான நிலத்தை உடைய நெய்த்தானம் முதலிய எந்த ஊரிலும் விளங்குகின்ற பெருங்கோயில்கள் பலவற்றைக் கண்டால், தொண்டர்களே! செருக்கிய வலிமை மிக்க இராவணனைத் தன் கால் விரலால் நசுக்கிய கயிலாய நாதனை அவ்விடங்களிலெல்லாம் காணலாம்.

கு-ரை: புத்தூர், பூவணம் இவை பாண்டிநாட்டுத் தலங்கள்.

புகலூர், புன்கூர், புறம்பயம், வலிவலம், வாய்மூர், வைகல், வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி, நெய்த்தானம் இவை சோழநாட்டுத் தலங்கள். வைகல்- வைகல் மாடக்கோயில். வன்னி - வன்னியூர். நிலம்மலி - நிலத்தின்மேற் புகழ் நிறைந்த மாற்பேறு, தொண்டை நாட்டுத்தலம். புலிவலம், பொய்கைநல்லூர் இவை வைப்புத்தலங்கள்.

எத்தானத்தும் - எடுத்தோதியனவேயன்றிப் (பெரியோரால் வணங்கப்படும்) எத்தலத்திலும். நிலவுபெருங் கோயில் பல கண்டால் - விளங்குகின்ற பெருமை பொருந்திய திருக்கோயில்கள் பலவற்றையும் சென்று காண்பீராயின் - தொண்டீர் - தொண்டர்களே. இங்கு, "கண்டால் கயிலாய நாதனையே காணலாம்" என்றது, 'அவ்விடங்களிற் காணலாம்' என்றதேயன்றி, கயிலைப் பெருமானை அடைதல் கூடும்' என்றருளிச் செய்ததூமாம். ஆகவே, 'அத்தலங்களை இயன்ற அளவிற் கரவாது சென்றுகாணுமின்' என்பது அருளாணையாயிற்று; நாயனார் அங்ஙனஞ்சென்று கண்டமை சொல்லவேண்டா. 'கலியும் வலியும்மிக்கோன்' என்க. கலி - எழுச்சி; செருக்கு.