பக்கம் எண் :

1067
 
2811.செந்தா மரைப்போ தணிந்தான் கண்டாய்

சிவன்கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்

பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்

பாலோடு நெய்தயிர்தே னாடி கண்டாய்

மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி

வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்

கொந்தார் பொழில்புடைசூழ் கொட்டை யூரிற்

கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

3


கு-ரை: கலை - மான். ஞானக் கண் -அறிவாகிய கண்; உருவகம்; 'கற்பார்க்கு அக்கல்வியறிவாய் நின்று பயன் தருவோன்' என்றபடி.

கபாலம் - தலை ஓடு; "அண்டகபாலம்" என்றது, அண்டச் சுவரின் உச்சியை. மலைப் பண்டம் -மலையில் விளையும் பொருள்கள்; அவை, 'அகில், சந்தனம், யானைத் தந்தம்' முதலியன. தெங்கு - தென்னை.

3. பொ-ரை: பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகள் நான்கு பக்கங்களிலும் சூழவிளங்கும் கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்து உறையும் தலைவன் செந்தாமரை மலரை அணிந்தவனும், சிவன்என்னும் நாமம் தனக்கே உரியவனும், தேவர்க்குத் தலைவனும், பந்தாடும் மெல்லிய விரல்களையுடைய பார்வதியைத்தன் ஆகத்தின் பாகத்தில் கொண்டவனும், பால்,தயிர், நெய், தேன் இவற்றில் ஆடப்பெறுபவனும், மந்தாரமரங்களைத் தள்ளிக் கொண்டு வரும் நீரையுடையகாவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து நிலைபெற்று நிற்கும் மணவாளனும் ஆவான்.

கு-ரை: மலர்களுட் சிறந்தது தாமரைமலரும், தாமரை மலர்களுள்ளும் சிறந்தது செந்தாமரையும் ஆதல்பற்றி, "செந்தாமரைப்போ தணிந்தான் கண்டாய்" என்று அருளினார். "பூவிற்குத் தாமரையே" (திருவள்ளுவமாலை- 36.), "பூவெனப்படுவது பொறிவாழ் பூவே" (நால்வர்நான்மணிமாலை - 40)என வந்தனவுங் காண்க.

சிவன் - மங்கலம் உடையவன். மந்தாரம், ஒருவகை மரம். உந்தி - புரட்டி. கொந்து - (மலர்க்) கொத்து.