| 2820. | பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் தன்னைப் | | | பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை | | | மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில் | | | மதியாகி மதிசடைமேல் வைத்தான் தன்னை | | | நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் தன்னை | | | நெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும் | | | நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை | | | நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. | 2 |
கு-ரை: சொல்லான் -சொல்லுவார் சொல்லும் சொற்கள் எல்லாமாய் இருப்பவன். பொருளான் - அச்சொற்களின் பொருளாய் இருப்பவன். சுருதியான் - வேதங்களாய் இருப்பவன். சுடர் ஆழி - ஒளிவீசும் சக்கரம். அல் - இரவு. "அடியார்கட்கு எளியான்" என்று அருளியதனால், "அரியான்' என்றது பிறர்க்கு என்பது பெறப்பட்டது. சரம் - 'பாசுபதம்' என்னும் அம்பு. சூரியனும் பெரு முனிவர்களும் இத்தலத்து வழிபட்டு நலம் பெற்றனர் போலும்! "நன்னகர்" என்றது, 'சிவதலம்' என்பதனைத் தமிழாற் கூறியவாறு. 2. பொ-ரை: செம்பஞ்சுக்குழம்பு ஊட்டப்பட்ட மெல்லிய பாதங்களை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனும், நிலமும், நீரும், தீயும்வீசும் காற்றும் ஆனவனும், மேகம் தவழும் வானமும், அவ்வானத்தில் ஊரும் மதியும் ஆகி அம்மதியைத் தன்சடை முடிமேல் தாங்கியவனும், என் மனத்தைத் தன் வழிநிறுத்தி அதன் நினைவுகள் எல்லாம் தானாகி நின்றவனும், நெடிய கடலைக் கடைந்தார் அனைவரும் ஓடி நீங்கும் வண்ணம் ஓங்கி எழுந்த நஞ்சைத் தான் உண்டு தேவர்கட்கு அமுதம் ஈந்தவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில்நான் கண்டேன். கு-ரை: 'என்நெஞ்சு உண்டு அதன்நினைவாகி நின்றான்' என்க. நெஞ்சத்தை உண்டமையாவது, அவன்வழி நிறுத்திக் கொண்டமை; அதனால், அது நினைப்பனயாவும் அவன் நினைப்பித்தவாறே நினைக்கும் நினைவுகளாயினமையின், இவ்வாறு அருளிச்செய்தார். இதனால், சுவாமிகளதுகரணங்கள் சிவகரணங்களே ஆயினமை தெற்றென விளங்கும். "கடைந்தவர்" என்பது, 'கடைந்தவராகிய அவர்' எனச் சுட்டும் சுட்டுப்பொருள் உடையது; செய்யுளாகலின் சுட்டுச்சொல் முன்னிற்றல் பொருந்திற்று.
|